Sunday, November 10, 2013

நடேசன் டீச்சர்...


‚‘‘டாங் டாங் டாங்'' 

தண்டவாள மணி ரெண்டாவது தடவயாக ஒலித்தது எண்டா கேற்ருக்க நிக்கிற மாணவ தலைவன் தன்ட கடமை உடனே செய்து விடுவான்.இழுத்து மூடி முகமாலை ஆமிக்காரன் போல சென்றி பலமா இருக்கும் .மணி அடிச்சா உடன ரெண்டடி வச்சா உள்ள போகலாம் எண்ட ஆக்களும் ஊகூம்,,, நக்கீரன் பரம்பரை தான் புத்திய காட்டிடும்.பிறகென்ன ஜே.எம்.பி.ஜெயராஜாட்ட வாங்கிறதுக்கு கைய ரெடியாக்க வேண்டியதுதான்.திரும்பி பாத்தா பாவமா ரெண்டு டீச்சர்மாரும் நிப்பினம்.அப்பாடா மனது எதோ அமைதி கொள்ளும்.வெள்ளி கிழமநாத்தில எம்பிட்டா தான் வாழ்க்கை வெறுக்கும்.நாலாவது மணிக்கு பிறகு தான் நாலு பெட்டயள் தொடங்குவாளவை ''நமச்சிவாய வாழ்க நாதன் தான் வாழ்க ...''. ''எல்லோரும் வாழ்க'' முடியேக்க கேற்ருக்க நிக்கிற எமக்கு முட்டி பேந்திடும்.நடுக்கமும் தொடங்கும் வரப்போறார் ... .

பிலாவ சுத்தி நிண்ட கூட்டம் ஒழுங்காக கலையும்.அதுக்குள்ளயும் 'சடீர்ர் புடீர்ர்' லைன் குழப்பினத்துக்கு. சுமனாதான் இருக்கோணும்.பேசாமா பிந்திவந்து வெளியல நிண்டிருக்கலாம். வரப்போறார்... .

அந்த தாவார மண்டபத்திலிருந்து கண்ணாடி இப்ப கேற்ர சூம்(soom) போடும். வரப்போறார்...

இந்த பிரம்பு எப்ப துலய போகுதோ கடவுளே... போலீஷ்ட்(polished)  பண்ணின சாப்பாத்தில மாண் படாத மாதிரி நடந்து வருவார்.
க்கூம்…‘‘ நீங்கள் எப்ப நேரத்துக்கு வாரியள் எண்டு நானும் பாக்கிறான், அல்லாடி நீங்கள் வந்தா போல மணிய அடிக்க சொல்லுறான்'' இது எங்களுக்கில்ல எண்டு தெரிஞ்சும் முகத்த வாடின மாதிரி வச்சிருப்பம். இதெல்லாம் ஒரு பேச்சா எத்தினய வாங்கபோறம்...மனசு சொல்லும். ''துறந்து விடு'' நக்கலா சொல்லுவார்.அடப்பாவி இவன் நல்லவனா கெட்டவனா ஆராச்சிக்கு முன்னே வகுப்பு வந்துவிடும்.பிலாவுக்கு இடது புறம், சுத்தி நெட் அடிச்சு மஞ்சள் பளுப்பு நிறத்தில தனி கட்டிடம்.ஐஞ்சாமாண்டு கொலசிப்காரங்களுக்கு இதுதான் நாலாம்மாடி.ஆனா ஆர் செய்த புண்ணியமோ எங்களுக்கு நடேசன் டீச்சர் தான் வகுப்பு டீச்சர். ஒண்ட விட்டு ஒரு வருசம் கோபாலபிள்ளை சேரும் டீச்சரும் கொலசிப் வகுப்பெடுபினம்.போனவருசம் எங்களுக்கு முதல் வகுப்புகாரன் ஆரோ கந்தசட்டி விரதம் புடிச்சு திட்டியிருப்பான்
போல அவர் எங்கட ஆண்டு பென்சனில போட்டார்.இருந்தாலும் சனி ஞாயிரில பெஷல் கிளாஸ் போய் கையாலே ஆமர் அடி வாங்கினது வேற கதை.
நேரம் செண்டு போனாலும் வாங்கு கதிரை பறி போகாது.பச்ச குத்தி வச்சிருப்போமில்ல.அதுக்கே ரெண்டு பேனை மை முடிஞ்சிருக்கும்.மட்டுமில்ல பேனை கரம்போட் விளையாட சதுரம்,பாட அட்டவணை முதல் கொண்டு ரெண்டும் ரெண்டும் எத்தினை எண்டு கூட்டி பாத்தது வரைக்கும் மேசை சொல்லும்.வகுப்புக்க வந்தோடனை என்ன கதைக்கிறோம் ஏது கதைகிறோம் எண்டில்லாமல் கச்சான் கடை களைகட்டும்.
டீச்சர் வந்திருக்கமாட்டா.  

கேற் சென்ரி போயிண்ட்காரன் அம்போ எண்டு திறந்து விட்டு போன கதவால அரக்க பரக்க முன்னுக்கு சின்ன பிள்ளய எத்த ஒரு கரியல் பேமனன்ரா ஒட்டின ஒரு கறள் பிடிச்ச சைக்கிள்,பிரேக் பிடிக்காம வாசல் தாண்டி வந்துதான் நிக்கும்.அப்பிடியே கொண்டு வந்து எங்கட வகுப்பு தாவாரத்தில தான் சாத்துவா. ஒவ்விசுக்கு(office) போய் சைன் பண்ணி டீச்சரும் வர கச்சான் யாவாரம் படுத்திடும். ''குட் மோனீங் டீச்சர்ர்ர்'' கோரசாகக் கத்துவோம்.மோனீங் பிள்ளயள்... அம்மா என்டா அம்மா தான்.

தன்னுடய கொடுப்பில் இல்லாத பல் தெரியும் வரை சிரிப்பா.ஒடுங்கின முகம், நாம் திராவிடர் என்பதை காட்டும் நிறம், அவர் மனத்தை வெளியே காட்டும் தலைமுடி என்றுமே வெளிப்பூச்சு இல்லாதவர் நடேசன் டீச்சர். சில வேளை யோசிச்சதுண்டு சிலபேருக்கு பென்சனே குடுக்க மாட்டாங்க போல.இளமையை வருத்தியதில் ஔவையானவள் நடேசன் டீச்சர்.அவருக்கு இழுப்பு நோய் இருப்பதாகவும் அறிந்ததுண்டு.வெண்கட்டிகளின் தாக்கத்தால் ஒருவேளை வந்திருக்கலாம்.தான் நிலை மறந்து கற்பிப்பாள்.முகமறிவதில் அவருக்கு நிகர் அவரே. ''நெல்சன் இன்டைக்கு சாப்பிட்டு வரேல போல... இங்க வா ...'' நெல்சானும் டீச்சரும் ஏதோ மூணு மூணுப்பார்கள்.டீச்சர் காண்ட் பாக்க(Handbag) திறந்து ஐஞ்சு ரூபா குடுப்பா.சிட்டாய் காண்டீனுக்கு பறப்பன்.அட்டை பணிச பக்கத்‌தில வச்சு றவுண்ட் றவுண்டா பிச்சு பிச்சு சாப்பிடுவான்.ஆசை வரும்.முகத்த நாமும் தொங்க போட்டு பத்து நாள் சாப்பிடாதவன் மாதிரி ஒரு ட்ரை பண்ணுவம். ஊகூம்...  
''கொப்பிய எடுங்கோ பிள்ளயள் ''... 
அது நெல்சனுக்கே வாய்த்த கலை.

''கந்தன் மரத்தை வெட்டினான் இதில் எழுவாய் பயனிலை
 தொடங்கி ராமு தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு 20 கிலோ மீற்ரர் வடக்கு திசை நோக்கி...'' வரை பாஸ் பேப்பர் பறக்கும்.          முடிந்ததும், ''பிள்ளைகள் பெடியளின்ர கொப்பியள
யும் பெடியள் பிள்ளைகளின்ட கோப்பியளயும் திருத்துங்கோ'' இங்கதான் வரும் பாருங்கோ மகாபாரதம்.ஏனோ தெரியாது எங்களுக்கும் அவயலுக்கும் ஒத்துப்போனதே கிடயாது.பின்ன நாமெல்லாம் ஆண் சிங்கங்கள் எப்படி பெண் பாவைகளுடன் குலாவுவது அப்படி எண்டு எங்களுக்கு இருந்தாலும் அதுகளுக்கு இதவிட பொல்லாத காரணம் ஏதோ வச்சிருக்கணும் போல. பெண் பிள்ளகளின்ட அம்மாமாரைதான் கேக்கோணும்.அட கூடபடிக்கிறானுகளே அப்பிடீனு ஒருநாளும் சிரிச்சது கிடயாது , கதைச்சது கிடயாது, முறைச்சது தான் அதிகம் அவளவயளுக்கு அப்பவே கொழுப்திகம்.இத மூட்டி விடுறதுக்கெண்தே ஐஞ்சாறு அலஞ்சதுக. வகுப்பில சண்ட,கிணத்தடில சண்ட,கிரவுண்டில சண்ட குடும்ப சண்ட தோத்தீடும் போங்க. சிலதுகளுக்கு நினைப்பு வேற தங்கள் எதோ 200 மாக்ஸ் எடுத்து கொலசிப் பாஸ் பண்ணுவம் எண்டு .குண்டன் சுமன் தான் சண்டைக்கு முன்னுக்க நிப்பான் அவன்ட கலுசான் வேற பாவாட மாதிரி பின்னுகிருந்து பாத்தா கன்பியூஸ் பண்ண வைக்கும்.முட்டைவேப்பெண்ணையில பொரிச்சு கொண்டுவந்தான் எண்டு சொல்லி தனிய சாப்பிடுவான்.உண்மதான் போல அப்பிடி மணக்கும்.இன்டேவல் நேரம் சாப்பாடு கொண்டுவராதவங்களுக்கு சாப்பாடு இளங்கோ தான். கதைதான். முகமூடி வீரர் மாயாவி தோன்றும் காட்டுக்குள் புதையல்ல்ல்....''டொட்ட டொய்ங்''.... டயானாவ முன்னால குதிரெல வச்சு தலிவர் லவ்வீட்டு வருவார்ர்டா......எண்டு முன்னால இருக்கிறவனுக்கு ஒரு அடி...பரணிதான் வாங்கி கொண்டும் வயப்பி ந்து கேட்டுகோண்டிருப்பான். மாயாவி புதயாள தோண்டும் வரை முன்னுக்கிருப்பவன் மூக்கால ரத்தம் சொட்ட சொட்ட வாங்க வேண்டியது தான்

‘‘டாங் டாங் டாங்''
 
இதென்னடா பள்ளிக்கூரம் விடட்டன் ண்டைக்கு பாத்த  ரஜனிண்ட கதை சொல்லுறான்...

டீச்சர் ‚‘‘ நான் சொன்னனெல்லோ வாய்ப்பாடு தெரியாமா ஒண்டும் செய்யேலாதேண்டு'' ஆரம்பிச்சுட்டாடா..

நானும் எப்படியாச்சும் ஒரு ரீல் கதை சொல்லோணுமேடா என்னத்த சொல்ல. ம் ம் ம்.. 
கதை ரெடி.இருடா உனக்கு மாயாவி புதையல் தானே தோண்டினார். சொல்லுறான் பார் நான் டயானாவையே தோ....... .

இண்டெவலுக்கு பிறகு வகுப்பில என்ன நடந்ததெண்டெ தெரியாது...

‘‘டாங் டாங் டாங்'' 

இந்த மூண்டாவது மணி மட்டும் ''செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே'' என்பதற்கு அர்த்தம் புரிய வைக்கும். எண்டாலும் எங்களுக்கு மட்டும் நடேசன் டீச்சரின் வகுப்பு தொடரும்.
மூணுமணி…
நாலுமணி… 
நாலரை…
டீச்சர் வீட்ட போகபோம். ''சரி பிள்ளயள் , வெள்ளன எழும்பி பாடியுங்கோ அப்பதான் மனசில நிக்கும்.கவனம் ரோட்டில கவனமா போகோணும் , வலது புறத்தால நடக்கோணும் என்ன...''      
 தாயின் கவனம்.

சைக்கிள் பாக்கில(Park) எங்கட சைக்கிள் மட்டும் தான் மிஞ்சி நிக்கும்.எடுத்துக்கொண்டு வரேக்க வகுப்புக்கு பின்னால நிக்கிற பெரிய பூவரசம் மரத்தடியில ஒருத்தான சுத்தி…       என்னடா எண்டு கூட்டத்த  பிச்சுக்கொண்டு உள்ளுக்க போனா ரஜனி படம் சும்மா 70அடி திரையில ஓடும். இளங்கோ தான் .ரஜனிய கொள்ளகோஷ்டி (அப்ப வில்லன அப்பிடித்தான் சொல்லுவம்) கலைச்சு கொண்டு வரும் குஷ்புவ ரஜனி முதுகில தூக்கி கொண்டு ஓடுவார் பாரு ஓட்டாம் ...(இந்த இடத்தில கட்டகாலன் நீரோஜன் விசில் கூட அடிச்சிருக்காநேண்டா பாருங்கோவன் தியேட்டர் எப்புடி களைகட்டி இருக்கெண்டு). அப்பிடியே ஒடிப்போய் ஒரு பாரில(bar)  ரஜனி தொங்க கொள்ள கோஷ்டிகாரன் ஒருவன் சுட ரஜனி பாருக்கு மற்றபக்கமா தொங்குவார்  அங்கால சுட உடன கீழ்பாக்கமா தொங்குவார் இப்புடியே சுட்டுகொண்டிருக்க (இன்னுமாடா  ரஜனிக்கு படல என்கிற சந்தேகத்தில அஜந்தன்ட நேத்தி சுருங்கிறத பாத்திட்டு) போடுவான் ஒரு கிளைமைக்ஸ். ஒருகுண்டு அவர்ட நெஞ்சில பட்டிடும்.  ‚‘‘ஐயோ கடவுளே ‚‘‘ பாவமாய் பதறும் சிவகுமார  பாத்து சோட்டுற  ஒவ்வொரு ரத்ததிலயும் பத்து ரஜனி வருவங்கடா வந்து கொள்ள கோஷ்டிய போட்டு டி அடி எண்டு அடிச்சு (பாவம்இந்த முறை சதீஷ்போல் ) ரெண்டு கையிலயும் பிஸ்டல வச்சு போட்டு தள்ளுவார்டா .ஒவ்வொரு ரஜனியா சேத்து கடசியா ஒரு ரஜனி வந்து குஷ்புவ தூக்கீட்டு போவர்டா ..(சுபம்)

தியேட்டர் அனல்பறக்கும் ஆளாளுக்கு சிரிச்சு கைதட்டி அது ஓவராய் போய் கூக்காட்டி , அது தங்களுக்குதான் எண்டு நினச்சு சரவணபவானியும் சந்தியும் மதுவந்தியும்  நினைச்சு எங்கள நைய்க்காட்டி , எங்களுக்க மேலும் விரிசல் விழுந்துபோய்ச்சு.

கொலசிப் சோதின நெருங்க நெருங்க காவடி முள்ளு ஒவொண்டா குத்துப்பட லை  வந்து ஆடதெண் ஆடின ஆட்டம் என்ன.இதில சுமனுக்கு கலை கூடி திருவையாற்றில இனோரு டீச்சரிடமும் திருநீறு போடபோனது இன்னொரு கதை.

காலம நாலுமணிக்கு அம்மாண்ட தேத்தண்ணியோட எழும்பினா எழுத்தெல்லாம் ரெண்டா தெரியும்.ரெண்டுதடவ படிச்சு 8மணிக்கு பள்ளிக்கூடம் போய் 4,30 மணி மட்டும் பள்ளிக்கூடத்தில இருந்து, வரேக்க ரெண்டு ரஜனிபடம் பாத்து ஸ்ஸ் கேட்டு ஆறுமணிக்கு பக்கத்து வீட்டக்ககாட்ட படிச்சு வீட்டவந்து பேந்தும் அம்மாட்ட படிச்சு கடவுளே எப்ப இந்த காவடிய க்குறதோ எண்டு போகும்.பக்கத்து வீடு பொடியள் கத்தி  குளறி விளையாடேக்க கொஞ்சம் பொறு கொலசிப் முடியட்டும்


''பிள்ளயள் கவனமா படியுங்கோடா .அவதானக்குறைவான பிழைகளே விடுரீயாள் யோசிச்சு பதில் எழுதுங்கோ...'' கதைக்கும் போது இயலாமையில் நடேசன் டீச்சர் தொண்டை வீங்கும்.

யேசுநாதரை சிலுவையில் இருந்து இறக்கும் நாளும் வந்தது.காலமையே குளிச்சு நேத்திப்புல்லா பாட்டயடிச்சு மாலையும் தேங்காயும்  அம்மன் கோயில்ல போய் சிதறு தேங்காய் போட்டு..பிள்ள எப்படியும் பாஸ்பண்னி போடும் அவன் கெட்டிக்காரன் அப்பிடி ஒரு தோறணைய அம்மாக்கு வரவச்சு எக்ஸ்சாம்  கோலுக்க குந்தியிந்து வெளியா பாத்தா நடேசன் டீச்சர்.எங்க தான் இல்லாட்டி பயந்து போயிருங்களோ பிள்ளயள் எண்டு தூரவா ஒரு இடத்தில இருந்து கொண்டு எங்களுக்காக வேண்டிக்கொண்டு.எக்ஸ்சாம் முடியும் மட்டும் இடத்தவிட்டு நகரவேயில்லை.

கேள்வி 01: மாலை 3.25 ஐ 24 மணித்தியாலத்தில் தருக ?
ப்பூ..டீச்சர் சும்மா லட்டு மாதிரி சொல்லித்தந்தாவ

கேள்வி 02: ரஜனி என்பவரின் வீடில் இருந்து 20 மைல் தொலைவில் உள்ள ....


குஷ்புவ தூக்கிட்டு ரஜனி என்னமா ஓடுவார் தெரியுமா. அதிலயும் தலைவர் அந்த பார் (bar)சீன் இருக்கே எப்புடி அவரால மட்டும் முடியுது கொள்ளக்கொஷ்டி கீழ சுட மேலயும் மேல சுட கீழையும் வாவ்...அதெப்புடி நெஞ்சில சுட்ட குண்டில பத்து ரஜனி வரமுடியும்.எங்கயோ லாஜிக் உதைக்கிதே.கள்ளன் இளங்கோ பொய் சொல்லிபோடான் போல. அவன கேக்கோணும்.உவனுக்கு நான் ஒரு ரஜனி கதை சொல்லணும் எப்படி சொல்லலாம் ம் ம் ம் .... ஆ.. ரஜனி வந்து குஷ்புவுக்கு பின்னால.... 

‘‘தட் தட் தட்‘‘

தம்பி நேரம் மூடிங்சுது பேப்பரா தாங்கோ ..
என்னது நேரம் முடிஞ்சுதா நான் இன்னும் எழுத்த கூட ஆரம்பிக்கலயே
மன்னிச்சுடுங்க டீச்சர் உங்கள இவளவு நேரமும் வெய்யிலா எங்களுக்காக இருக்க வச்சு போட்டன்.



ஆறாம் ஆண்டு முதலாம் தவணை

நாங்க எல்லாரும் ஐஞ்சாமான்டு பாஸ்.கொலசிப் ரிஸல்ட் இன்னும் வரெல்ல. கொண்டாட்டாமோ கொண்டாட்டம் தான்.மாயாவி , ஜேம்ஸ் பண்டு , அம்புலிமாமா , ரஜனி . ஆளுக்கொரு தியேட்டர் திறந்து புதுப்புது படமாய் போட்டாங்கள்.பாவம் மயூரன், காவியன்பன் , கலையன்பன், தீபன், நெல்சன் எல்லா தியேட்டரும் ஏறி இறங்கி கத கேட்டங்களே தவிர ஒரு படமும் இவங்களா ஓட்டியதில்லை .ராஜதீபன் இன்னும் கொஞ்ச பேர் சென்.திரேசாவில இருந்து எங்கடா பள்ளி கூடத்துக்கு மாறிவந்து எங்கடா பெட்டயலோட தோட்டாங்காயாட்டம் விளையாட வந்தது பாருங்க ஒரு கோவம்...என்னது எங்கட பெட்டயலோட அன்னியர் கூடலா...
அப்பதான் புரிஞ்சுது  நாங்கள் எங்கட பெட்டயலோட இருந்த பாசம்.எண்டாலும் இடைக்கிடை சண்டை , வழக்கேண்டு ஓடிக்கொண்டுதான் இருந்தது.குளத்து பாண்ட் ரோட்டில போகேக்க ஆரோ ஒருத்தான் யட்டியோட குளிச்சு கொண்டு நிக்கிறத எமலாந்தி  கொண்டு நடந்து போன எழிலுக்கரசிண்ட ரெண்டு காலுக்கு நடுவால சைக்கிள விட்டு திரும்பி பாத்தா பாரனீண்ட சைக்கிள் மக்காட்டில எழிலுக்கரசி இருக்குது.தாய் அடுத்தநாள் அதிபரீட்ட வந்து வேணுமெண்டுதான் இடிச்சவன்கள் எண்டு போட்டுகுடுக்க ஓட்டும் போல இருந்த உறவும் துண்டறாவா அறுந்து போச்சு.



நாளைய தினம் ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் - செய்தி
 

‚‘‘
என்ர அம்மாளாச்சியே நான் எப்புடியும் பாஸ் பண்ணிடோனும்.ஒவொரு நாளும் அம்மா கட்டிதாற மாலை கொண்டந்து தாரனானில்ல எப்புடியாச்சும் பாஸ் பண்ண பண்ணி போடு.நான் ஒரு மாலைக்கு ஒரு மாக்ஸ் என்டாலும் 250 மாக்ஸ் வந்துடும்.அதில ஒரு 50த கழிச்சாலும் பரவாயில்லை அம்மாளாச்சி இது வரை  அம்மாவ நான் பெருமப்படுதித்தினதே இல்ல.ஒரு சின்ன பிரைஸ் கூட வாங்கினது இல்லை. கொலசிப் பாஸ் பண்ணியாச்சும் அம்மாவா சந்தோசபடுத்தோனும் என்ர அம்மாளாச்சி....‘‘


ஒவ்விசுக்க(office) இருந்து ஒரு பேப்பரோட நடேசன் டீச்சர் தான் வந்தா. ''  

நாலு பேர் தான் பிள்ளயள் பாஸ்...
''சரவணபவானி, ஜீவிதா,அஜந்தன்,இளங்கோ''
வெள்ளேந்தியாய் கேட்டென் ''டீச்சர் நான்'' முகத்தை சுருக்கி துயராய் என்னை பார்த்தார்.

sorry அம்மா
உங்களை நான் இதுவரையும் பெருமைப்படுத்தியதே கிடையாது...