முயலாமை
கத்தி சுட்ட கதயாமே
என்னது முருகதாசே கதய சுட்டாரா.. போங்கய்யா அந்தாளே கதய சுட்டு
படம் 100 கோடின்னு அள்ளிடுத்துன்ணு ஸ்டேட்மண்ட் விடும்போது நாம ஒரு பத்து லைக்கு வாங்கிறதுக்கு
முயலும் ஆமையும் கதய சுடப்படாதா…
மெயின் கதை ( copy rights to my பாட்டி) >
காலம் 1980 .கொடிகாமத்தில ஒரு முயலும் ஆமையும்
இருந்திச்சாம்.முயலாருக்கு
தான் ரன்னிங்கில கிங் எண்டுறத காட்டோணும் எண்டு ஆசை.பெரிய லிமிட் காட்டினாத்தான் தன்ட
ரெக்கோட் உடைக்கேலாது எண்டு காட்ட ஆரை போட்டிக்கு கூப்பிடலாம் எண்டு யோசிச்சுதாம்.சிக்கிணான்டா
சேகரு..ஆமையார்..ஒரு நீதிக்கதை உருவாகும் அதை சந்ததி சந்தியா சொல்லபோறாங்க எண்டு தெரியாம
சும்மா புறாபொறுக்கி வயலுக்க கிடந்த ஆமையார வம்புக்கு இளுத்தாராம் முயலார்.பாவம் பரிசுத்தொகைக்கு
ஆசைப்பட்டு ஓட்டுக்க இருந்து மண்டைய எடுத்து ஓம் எண்டாராம் ஆமையார்.
கட் பண்ணி ஓப்பிண் பண்ணினா கொடிகாமசந்தி ஆரம்பக்கோட்டில முயலும்
ஆமையும்.ரோட்டாலயே ஓடணும் வலப்பக்கம் கொஞ்சம் போனாலும் யாழ்தேவியால பரலோகம்…பளைகடந்து
இயக்கச்சி சந்தில எல்லைக்கோடு…நிபந்தனைகள் எல்லாம் வரையறுத்தாயிற்று.
ஒன்யுவமாக் செற் ரெடி கோ….
எடுத்த எடுப்பிலயெ லம்போகினி பிக்கப் தொட்டார் முயலார்.யாழ்
- கண்டி வெள்ளக்காரன் போட்ட ரோட்டு.நம்ம ஊரு வண்டில்காரர் சல்லி சல்லியா பேர்த்தெடுக்க
ஒவ்வொரு பஜட்டிலயும் நிதி ஒதுக்கி தாரினால பூசி மெழுகின ரோட்டில சிட்டாய்பறந்தார் முயலார்.பாவம்
ஆமையார்.நடக்கிறது நடக்கட்டும் எண்டு மனதில உறுதியோட தன்னுடய ஸ்பீட்டிலயே நடைபோட்டார்.விண்கூவின
முயலாருக்கு முகமாலைக்கு கொஞ்சம் இங்காலதான் எஞ்சின் சூடாகிட்டுது.சடின் பிரேக் போட்டு
சைட் கண்ணாடிய பாத்தர் ஆமையாரிண்ட நாமத்தையே காணல.நிண்டு திரும்பிப்பார்த்தார் தூரவா
ஒருகிழவன் ஒண்டுக்கு ஒதுங்கிறது மட்டும் தெரிஞ்சுது.என்னடா இது..நாம மட்டும் அன்னப்போஸ்டா
ஜெயிக்கபோரோமா..பக்கத்தில இருந்த கேணிக்க தாகம் தீர தாகசாந்தி செய்தார்.பிறகும் ரோட்டப்பாக்க
ஆமையாரைக்காணவில்லை.எப்படியோ நாமதானே ஜெயிக்கப்போகிறோம் எண்ட மமதையில் பக்கத்தில நிண்ட
வடலிக்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க படுத்தவர் படுத்தவர்தான்.ரெண்டுதரம் யாழ்தேவி கடந்த
சத்ததிலும் எழும்பாதவர் திடுக்கிட்டு முழிச்சுப்பாத்தா காலம் கடந்திருந்தது.ஆமை எல்லைக்கோட்டைத்
தொட்டு குலுக்கோஸ் சாப்பிட்டுக்கொண்டு நிண்டது.முயலுக்கு கண் இருண்டது.
நீதி >
சரிவர முயலாமை தோல்வியைத் தரும்.
தன்னால் மட்டுமே முடியும் என்கிற மமதை தன்னையே கொல்லும்.
எவனுக்கு எது கிடைக்கோணும் எண்டிருக்கோ அதுவே அவனுக்கு கிடைக்கும்.
முயலாமை Version
1.0
காலம் 2005.சரியா 15 வருசம் கழிச்சு.உன்னால எங்கட இனத்துக்கே
கேவலம்….பார் எப்படி இருந்த இனத்தை இப்ப நீதிக்கதயில வில்லனா போட்டு ஊரே கைகோட்டி சிரிக்குது.இதவிட
நாண்டுகிட்டு சாகலாம் என்கிற பழிச்சொல்லுகளுக்கும் இழிச்சொல்லுகளுக்கு ஆளாகப்பயந்து
பழிக்குப் பழிவாங்க சந்தர்ப்பம் பாத்து காத்திருந்தது முயல்.இயக்கமும் ஆமியும் ஒன்னா
கைகொடுத்தாலும் ஆமை இனத்தை தோற்கடிக்காமல் ஓயாமாட்டேன் என சத்தியம் செய்தது முயல்.முகமாலை
திறந்தாச்சு திறமாய் ரோட்டும் போட்டாச்சு.தச்சமயம் களைப்பு வந்தால்கூட படுக்க ஒரு வடலி
இல்லாம கிளைமோர் பயத்தில ரோட்டு ரெண்டுபக்கமும் கிளியர் பண்ணி பங்கருக்கும் யூஸ் பண்ணியாச்சு.முகமாலை
கடக்க பாஸ்கூட கையில இருக்கு.இது தாண்டா சந்தர்ப்பம்.கூப்பிடடா அந்த ஆமையை..வரமறுத்த
ஆமையை நோர்வேயை தூதுக்கனுப்பி ஒப்பந்ததில ஒத்துக்கொள்ள வைத்தது முயல்.ஆமையோ மாட்டன்
மாட்டன் எண்ட போருக்கு கொண்டுபோற சூரனைப்போல் சுமந்து கொண்டுபோய் கொடிகாமச்சந்தியில
இறக்கினாங்கள்.இம்முறை சின்ன மாற்றம்.இயக்கச்சி பாதுகாப்பற்ற வலயமாகயால் கிளிநொச்சிவரை
ஓட்டத்தூரம் நீட்டப்பட்டிருந்தது.தலைக்குமேல வெள்ளம் போனபின் சாண் என்ன முழம் என்ன
அதற்கும் ஒத்துக்கொண்டது ஆமை.இம்முறை சைட் கண்ணாடியே பாக்கிறதில்லை யெஸ்.. யெஸ்.. உறுதியெடுத்தது
முயல்.தனது பலத்திலும் பன்மடங்கு தன்னம்பிக்கை வளர்த்தது ஆமை.
ஒன்யுவமாக் செற் ரெடி கோ….
ஏற்க்கனவே மனசுக்க வைச்சிருந்த துவேசம் குரோதம் எல்லம் சேர்த்து
அக்சிலெட் பண்ணினார் முயலார்.150 Km|h இதிலயே இப்படி எண்டா ஆனையிறவு வெளி வரட்டும்
மனசுக்குள் எண்ணிக்கொண்டார் முயலார்.முக்கால் மணிநேரத்தில் முகமாலைஆமி பொயின்ற் கடந்து
கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த ஐ.சி.ஆர்.சி வெள்ளக்காரனுக்கும் பாய் (Bay) காட்டி போக்குவரத்து
கண்காணிப்பு பிரிவு கொட்டிலடி அண்மித்தார் முயலார்.அப்பதான் ஆமையார் உசன் ஏத்தம் கண்டிருந்தார்.இண்டைக்கெண்டு
இவ்வளவு சனமடா.. லைன உடைச்சுகொண்டும் உள்ளுக்க போகேலாது நல்லகாலம் பெமனன்ற் பாஸ் எண்டபடியா
போம் ஒண்டும் நிரப்ப தேவையிராதபடியால் வேகமாகவே பிறவுண் சாறி கட்டியிருந்த பணியாளரை
வரிசையில போய் நெருங்கினார்.முயலார்.
வணக்கம் அண்ணை..
உங்கட பெயர்???
எங்க இருந்து வாரியள்???
சொந்த இடம் அங்கதானே???..
ஒருக்க அந்த “இ” குடிலுக்க ஒரு போம் நிரப்போணும்…இல்லையுங்கோ
நான் ஒரு போட்டியில ஓடிக்கொண்டிருக்கிறன்.போன மாசம் தானே நிரப்பினான்.
அது போன மாசம் நான் சொல்லுறது இந்த மாசம்..
வரேக்க கண்டிப்பா நிரப்புறன்.
ஒரு மாதிரி உள்வர அனுமதித்துண்டோட கேற்றுக்காரனிட்ட குடுத்திட்டு
திரும்பிப்பார்த்தார்.ஆமையாரின் அறிகுறியே இல்ல.நிரந்தர பாஸ் எனக்கே இப்பிடியெண்டா
பின்னால ஒண்டுமில்லாம வாற ஆமையாரின் நிலை.அதுவே அவருக்கு ஒரு கிக் குடுக்க இன்னும்
ஒரு படி வேகம் கூட்டினார்.பளை இயக்கச்சி கடந்து வெளி வரைக்கதான் முயலாருக்கு தன்னில
இதுவரை இருந்த அத்தனை கெட்ட பெயரும் இல்லாமல் போகபோகுதெண்ட நினைப்பில வேகத்தை இன்னுமொரு
படி உயர்த்தினார்.180 Km|H சிட்டாய்ப்பறந்தார்.
தூரவா கடும் நீலமும் லைட் நீலமும் கலந்து தெரியேக்கையே முயலார் அலேட் ஆகியிருக்கோணும்.அடிக்கடி
கிளிநொச்சி போகாததால அது எங்கட காவல்துறைதானே எண்ட நினைப்பில முயலார் வேகத்தில
கைவைக்கவில்லை.அவங்களும்
கையில எதோ வச்சிருக்க, “பார்டா நான் ஓடுற விசயம் தெரிஞ்சு காவல்துறையே வீடியோ எடுக்குதெண்டு”
நினைச்சு ரற்றா வேற காட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்.கொஞ்சதூரம் போகல்ல சைட் கண்ணாடியில
ஒரு வெள்ளை கலர் CBZ மோட்டார்சைக்கிள் துரத்துர மாதிரி இருக்க அக்சிலெட்டர்ல இருந்து
காலை எடுத்தார் முயலார்.கறுத்த மீசை வெள்ளை கெல்மற்காரர் “தம்பி சைட்டா நிப்பாட்டும்”….
ஏன் நிப்பாட்டுறாங்கள் எண்டு தெரியாமலே பிரேக் போட்டார் முயாலார்.இதுல வேகம் 80 நீர்
எத்தினையில போரீர் தெரியுதே..அடப்பாவமே இது வேகம் அளக்கும் கருவியா..ஊருக்க இன்னும்
முழுசா ரேடியோவே வரலடா..இது வந்திருச்சே மனசுக்குள் திட்டினார் முயலார். “மன்னிச்சிருங்கண்ணை
ஓட்டப்போட்டி அதால கொஞ்சம் வேகமா ஓடிட்டன்”..மன்னிப்பா தமிழில் பிடிக்காதாவார்த்தையே
மன்னிப்பு எண்டுகொண்டே சைட் பெட்டிக்க இருந்த குற்றத்தாக்கல் பத்திரத்தை எடுத்து நிரப்பத்தொடங்கினார்.தம்பி
ஓவர்ஸ்பீட்டுக்கு 1000 நிக்கசொல்லியும் ஓடி துரத்திப்பிடிச்சதுக்கு 500 எடும் பைனகட்டும்."அண்ணையான
என்னட்ட காசில்ல.."
சட்டம் தன் கடமையை செய்யும்.. ஏறும் முன்னுக்கு.
இவ்வளவு நேரமும் மூச்சுவாங்க ஓடினவர் இப்ப பெற்றோல் ராங்கில
குந்தி இருக்க இருசக்கர மேட்டர்வண்டி பரந்தன் காவல்துறையை அடைந்தது. "நாளைக்குத்தான்
மன்றில முன்னிலைப்படுத்துவம் அதுவரையும் உள்ளயே இரும்." சொன்னார் தலைமைகாவலர்.கண் இருட்டியது
முயலாருக்கு பற்பொடி வந்ததால் விடிந்தது…முன்னயதைவிடவும் மெதுவாக சென்றும் எல்லைக்கோட்டைத்தொட்டார்
ஆமையார்.
நீதி >
சரிவர முயலாமை தோல்வியைத் தரும்.
தன்னால் மட்டுமே முடியும் என்கிற மமதை தன்னையே கொல்லும்.
எவனுக்கு எது கிடைக்கோணும் எண்டிருக்கோ அதுவே அவனுக்கு கிடைக்கும்.
முயலாமை Version
2.0
காலம் 2013. மல்ரிபரல், மிக், கொத்துக்குண்டு எதுவும் முயலிட்டயும்
ஆமையிட்டயும் வேகல.முள்ளிவாக்காலால தப்பி முகாமுக்க மாட்டுப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு
வந்தாலும் முயலாரின்ட மனதில மாற்றமில்ல.வெண்டே ஆகவேண்டுமெண்டு வெறி.அதாகப்பட்டது தன்
முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கைமரமேறி உயிரற்ற உடலை
தன் தோளில் போட்டுக்கொண்டதாய் வன்மம் வளர்த்தது முயல். போன முறை காவல்துறையிட்ட ஓவர்ஸ்பீட்டில
மாட்டினதால மிஸ்ஸாப்போட்டுது.ஆமையிடம் என் தோல்வியை நான் ஒப்புக்கொள்வதாய் இல்லை.இன்னுமொரு
வாய்ப்புக்காய் காத்திருந்தது முயல்.இதுவும் நல்ல சந்தர்ப்பம் தான் ஒரே நாடு காப்பற்
ரோடு நவநீதம்பிள்ளை வாரதால ஆனையிறவிலயும் பதிவில்லை.நூறுரூபா வெட்டினா பொலீசையும் சிம்பிளா
சமாளிக்கலாம்..
காலம் கனிந்தது.ஆமையிடம் தூதுவிட்டது முயல்.ரோட்டை உயத்தினதால
குளங்களுக்கு தண்ணிவரத்தின்றி தத்தளித்த ஆமைக்கு இது எனக்கு தேவையா என எண்ணிக்கொண்டது.போகாட்டி
உவன் ஜெனீவா வரைபோவான் எண்டதால போனால் போகட்டும் என சம்மதித்தது ஆமை.மீண்டும் கொடிகாமச்சந்தி.இம்முறையும்
கிளிநொச்சிய டிப்போ ஜந்திய(சந்தி) எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது.விடியவெள்ளன ஓடினா
பொலீஸ்தொல்லை கொழும்பு பஸ்காரர் தொல்லை இல்லாமல் ஓடலாம் எண்டதால விடியவெள்ளனவே இருவரும்
ஆரம்பஸ்தானத்திற்கு ஆஜர்…
இம்முறை நிதானமாய்தான் ஓடோனும்.கொடிகாம பொலீஸ் பளை பொலீஸ்
ஐயக்கச்சிய பொலீஸ் பரந்தனுவ பொலீஸ் கிளிநொச்சிய பொலீஸ் நூறு நூறு ஐநூறு பொக்கற்றுக்க
மாத்தி இருக்குதா எண்டு செக்பண்ணிக்கொண்டது முயல்.
ஒன்யுவமாக் செற் ரெடி கோ….
பெஸ்ட் கியரை போட்டு நிதானமய் கிளைச்சை விட்டார் முயலார்.கணிசமான
வேகத்தில் நிதானமாய்தான் ஓடத்தொடங்கினார் முயலார்.ஆமையும் தன்னாலான வேகத்தில் நகரத்தொடங்கியது.முயல்
முகமாலைகடக்கேக்கதான் ஆமை மிருசுவில் சந்தியை அண்மித்தது.ரோட்டுக்கு கிட்டவா கள்ளர்,கல்லெறிகாரர்
பயத்துக்கு கேற்றுக்கு லைட் போட்டிருந்த வீட்டுக்கு கிட்ட வரத்தான் பாசையூரில இருந்து
வந்து கொண்டிருந்த மோட்டர்சைக்கிள்ள மீன்யாவாரி கண்ணுக்கு லைட் வெளிச்சத்தில ஆமையும்
அந்தமாதிரி தெரிய, ஆரம்பிச்சது ஆமைக்கு சனிமாற்றம். மீனே மாட்டாம இந்திய டோலர்படகுகாரங்களை
திட்டிக்கொண்டு வந்தவருக்கு நல்ல பாலாமை.ஐஞ்சுகிலோவாவது தேறும் என எண்ணி நிதானமாய்
வண்டியயை நிப்பாட்டி ஆமையாரைதூக்கி மீன் பெட்டிக்க போட்டுக்கொண்டார். “சே….. செல்லிலதப்பி
செல்வனிட்ட மாட்டீட்டனே” என நொந்துகொண்டது ஆமை.பெற்றொல் இலவசமாய்க் கிடைத்தாலும் மண்ணெண்ணையில்
பழக்கப்பட்ட எஞ்சினும் செல்வனும் ஊது பைப்பை எடுத்து வாயில்வைத்து ஊதியபடி கிக்கரை
உதைத்தார்.
இடக்கிடை மக்கர் பண்ணினாலும் வாய்க்கும் காபரேட்டருக்கும்
உள்ள கனெக்சனில வண்டி பறந்தது.பெட்டிக்க இருந்து ஆமையார் இடைவெளிக்கால ரோட்டைபாத்தபடியே
வந்தார்.இயக்கச்சி கழிஞ்சு ஆனையிறவு வெளிக்க வரேக்கதான் “புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது வேட்டைக்காரன் வரதைப்பாத்து” பாட்டோட முயலார் ஓடிந்துகொண்டிருந்தார்.மூடியிருந்த
உரபாக்க இழுத்துப்போட்டு ஆமை உரத்து சொல்லிச்சாம் முயலைப்பாத்து ‘’மச்சான் செத்தாலும் சாவனேயண்டி செக்கண்டா வரமாட்டன்’’…சடிண்பிறேக்
போட்ட முயலுக்கு கண் இருட்டியது///
நீதி >
சரிவர முயலாமை தோல்வியைத் தரும்.
தன்னால் மட்டுமே முடியும் என்கிற மமதை தன்னையே கொல்லும்.
எவனுக்கு எது கிடைக்கோணும் எண்டிருக்கோ அதுவே அவனுக்கு கிடைக்கும்
தத்துவம்> காலங்கள் மாறலாம் But நீதி எண்னைக்கும் மாறாது///

