Friday, November 7, 2014

முயலாமை 


கத்தி சுட்ட கதயாமே
என்னது முருகதாசே கதய சுட்டாரா.. போங்கய்யா அந்தாளே கதய சுட்டு படம் 100 கோடின்னு அள்ளிடுத்துன்ணு ஸ்டேட்மண்ட் விடும்போது நாம ஒரு பத்து லைக்கு வாங்கிறதுக்கு முயலும் ஆமையும் கதய  சுடப்படாதா…

மெயின் கதை ( copy rights to my பாட்டி) >

காலம் 1980 .கொடிகாமத்தில ஒரு முயலும் ஆமையும்
இருந்திச்சாம்.முயலாருக்கு தான் ரன்னிங்கில கிங் எண்டுறத காட்டோணும் எண்டு ஆசை.பெரிய லிமிட் காட்டினாத்தான் தன்ட ரெக்கோட் உடைக்கேலாது எண்டு காட்ட ஆரை போட்டிக்கு கூப்பிடலாம் எண்டு யோசிச்சுதாம்.சிக்கிணான்டா சேகரு..ஆமையார்..ஒரு நீதிக்கதை உருவாகும் அதை சந்ததி சந்தியா சொல்லபோறாங்க எண்டு தெரியாம சும்மா புறாபொறுக்கி வயலுக்க கிடந்த ஆமையார வம்புக்கு இளுத்தாராம் முயலார்.பாவம் பரிசுத்தொகைக்கு ஆசைப்பட்டு ஓட்டுக்க இருந்து மண்டைய எடுத்து ஓம் எண்டாராம் ஆமையார்.
கட் பண்ணி ஓப்பிண் பண்ணினா கொடிகாமசந்தி ஆரம்பக்கோட்டில முயலும் ஆமையும்.ரோட்டாலயே ஓடணும் வலப்பக்கம் கொஞ்சம் போனாலும் யாழ்தேவியால பரலோகம்…பளைகடந்து இயக்கச்சி சந்தில எல்லைக்கோடு…நிபந்தனைகள் எல்லாம் வரையறுத்தாயிற்று.
ஒன்யுவமாக் செற் ரெடி கோ….
எடுத்த எடுப்பிலயெ லம்போகினி பிக்கப் தொட்டார் முயலார்.யாழ் - கண்டி வெள்ளக்காரன் போட்ட ரோட்டு.நம்ம ஊரு வண்டில்காரர் சல்லி சல்லியா பேர்த்தெடுக்க ஒவ்வொரு பஜட்டிலயும் நிதி ஒதுக்கி தாரினால பூசி மெழுகின ரோட்டில சிட்டாய்பறந்தார் முயலார்.பாவம் ஆமையார்.நடக்கிறது நடக்கட்டும் எண்டு மனதில உறுதியோட தன்னுடய ஸ்பீட்டிலயே நடைபோட்டார்.விண்கூவின முயலாருக்கு முகமாலைக்கு கொஞ்சம் இங்காலதான் எஞ்சின் சூடாகிட்டுது.சடின் பிரேக் போட்டு சைட் கண்ணாடிய பாத்தர் ஆமையாரிண்ட நாமத்தையே காணல.நிண்டு திரும்பிப்பார்த்தார் தூரவா ஒருகிழவன் ஒண்டுக்கு ஒதுங்கிறது மட்டும் தெரிஞ்சுது.என்னடா இது..நாம மட்டும் அன்னப்போஸ்டா ஜெயிக்கபோரோமா..பக்கத்தில இருந்த கேணிக்க தாகம் தீர தாகசாந்தி செய்தார்.பிறகும் ரோட்டப்பாக்க ஆமையாரைக்காணவில்லை.எப்படியோ நாமதானே ஜெயிக்கப்போகிறோம் எண்ட மமதையில் பக்கத்தில நிண்ட வடலிக்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க படுத்தவர் படுத்தவர்தான்.ரெண்டுதரம் யாழ்தேவி கடந்த சத்ததிலும் எழும்பாதவர் திடுக்கிட்டு முழிச்சுப்பாத்தா காலம் கடந்திருந்தது.ஆமை எல்லைக்கோட்டைத் தொட்டு குலுக்கோஸ் சாப்பிட்டுக்கொண்டு நிண்டது.முயலுக்கு கண் இருண்டது.

நீதி > 
சரிவர முயலாமை தோல்வியைத் தரும்.
தன்னால் மட்டுமே முடியும் என்கிற மமதை தன்னையே கொல்லும்.
எவனுக்கு எது கிடைக்கோணும் எண்டிருக்கோ அதுவே அவனுக்கு கிடைக்கும்.

முயலாமை Version 1.0

காலம் 2005.சரியா 15 வருசம் கழிச்சு.உன்னால எங்கட இனத்துக்கே கேவலம்….பார் எப்படி இருந்த இனத்தை இப்ப நீதிக்கதயில வில்லனா போட்டு ஊரே கைகோட்டி சிரிக்குது.இதவிட நாண்டுகிட்டு சாகலாம் என்கிற பழிச்சொல்லுகளுக்கும் இழிச்சொல்லுகளுக்கு ஆளாகப்பயந்து பழிக்குப் பழிவாங்க சந்தர்ப்பம் பாத்து காத்திருந்தது முயல்.இயக்கமும் ஆமியும் ஒன்னா கைகொடுத்தாலும் ஆமை இனத்தை தோற்கடிக்காமல் ஓயாமாட்டேன் என சத்தியம் செய்தது முயல்.முகமாலை திறந்தாச்சு திறமாய் ரோட்டும் போட்டாச்சு.தச்சமயம் களைப்பு வந்தால்கூட படுக்க ஒரு வடலி இல்லாம கிளைமோர் பயத்தில ரோட்டு ரெண்டுபக்கமும் கிளியர் பண்ணி பங்கருக்கும் யூஸ் பண்ணியாச்சு.முகமாலை கடக்க பாஸ்கூட கையில இருக்கு.இது தாண்டா சந்தர்ப்பம்.கூப்பிடடா அந்த ஆமையை..வரமறுத்த ஆமையை நோர்வேயை தூதுக்கனுப்பி ஒப்பந்ததில ஒத்துக்கொள்ள வைத்தது முயல்.ஆமையோ மாட்டன் மாட்டன் எண்ட போருக்கு கொண்டுபோற சூரனைப்போல் சுமந்து கொண்டுபோய் கொடிகாமச்சந்தியில இறக்கினாங்கள்.இம்முறை சின்ன மாற்றம்.இயக்கச்சி பாதுகாப்பற்ற வலயமாகயால் கிளிநொச்சிவரை ஓட்டத்தூரம் நீட்டப்பட்டிருந்தது.தலைக்குமேல வெள்ளம் போனபின் சாண் என்ன முழம் என்ன அதற்கும் ஒத்துக்கொண்டது ஆமை.இம்முறை சைட் கண்ணாடியே பாக்கிறதில்லை யெஸ்.. யெஸ்.. உறுதியெடுத்தது முயல்.தனது பலத்திலும் பன்மடங்கு தன்னம்பிக்கை வளர்த்தது ஆமை.
ஒன்யுவமாக் செற் ரெடி கோ….
ஏற்க்கனவே மனசுக்க வைச்சிருந்த துவேசம் குரோதம் எல்லம் சேர்த்து அக்சிலெட் பண்ணினார் முயலார்.150 Km|h இதிலயே இப்படி எண்டா ஆனையிறவு வெளி வரட்டும் மனசுக்குள் எண்ணிக்கொண்டார் முயலார்.முக்கால் மணிநேரத்தில் முகமாலைஆமி பொயின்ற் கடந்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த ஐ.சி.ஆர்.சி வெள்ளக்காரனுக்கும் பாய் (Bay) காட்டி போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு கொட்டிலடி அண்மித்தார் முயலார்.அப்பதான் ஆமையார் உசன் ஏத்தம் கண்டிருந்தார்.இண்டைக்கெண்டு இவ்வளவு சனமடா.. லைன உடைச்சுகொண்டும் உள்ளுக்க போகேலாது நல்லகாலம் பெமனன்ற் பாஸ் எண்டபடியா போம் ஒண்டும் நிரப்ப தேவையிராதபடியால் வேகமாகவே பிறவுண் சாறி கட்டியிருந்த பணியாளரை வரிசையில போய் நெருங்கினார்.முயலார்.
வணக்கம் அண்ணை..
உங்கட பெயர்???
எங்க இருந்து வாரியள்???
சொந்த இடம் அங்கதானே???..
ஒருக்க அந்த “இ” குடிலுக்க ஒரு போம் நிரப்போணும்…இல்லையுங்கோ நான் ஒரு போட்டியில ஓடிக்கொண்டிருக்கிறன்.போன மாசம் தானே நிரப்பினான்.
அது போன மாசம் நான் சொல்லுறது இந்த மாசம்..
வரேக்க கண்டிப்பா நிரப்புறன்.
ஒரு மாதிரி உள்வர அனுமதித்துண்டோட கேற்றுக்காரனிட்ட குடுத்திட்டு திரும்பிப்பார்த்தார்.ஆமையாரின் அறிகுறியே இல்ல.நிரந்தர பாஸ் எனக்கே இப்பிடியெண்டா பின்னால ஒண்டுமில்லாம வாற ஆமையாரின் நிலை.அதுவே அவருக்கு ஒரு கிக் குடுக்க இன்னும் ஒரு படி வேகம் கூட்டினார்.பளை இயக்கச்சி கடந்து வெளி வரைக்கதான் முயலாருக்கு தன்னில இதுவரை இருந்த அத்தனை கெட்ட பெயரும் இல்லாமல் போகபோகுதெண்ட நினைப்பில வேகத்தை இன்னுமொரு படி உயர்த்தினார்.180 Km|H சிட்டாய்ப்பறந்தார். தூரவா கடும் நீலமும் லைட் நீலமும் கலந்து தெரியேக்கையே முயலார் அலேட் ஆகியிருக்கோணும்.அடிக்கடி கிளிநொச்சி போகாததால அது எங்கட காவல்துறைதானே எண்ட நினைப்பில முயலார் வேகத்தில
கைவைக்கவில்லை.அவங்களும் கையில எதோ வச்சிருக்க, “பார்டா நான் ஓடுற விசயம் தெரிஞ்சு காவல்துறையே வீடியோ எடுக்குதெண்டு” நினைச்சு ரற்றா வேற காட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்.கொஞ்சதூரம் போகல்ல சைட் கண்ணாடியில ஒரு வெள்ளை கலர் CBZ மோட்டார்சைக்கிள் துரத்துர மாதிரி இருக்க அக்சிலெட்டர்ல இருந்து காலை எடுத்தார் முயலார்.கறுத்த மீசை வெள்ளை கெல்மற்காரர் “தம்பி சைட்டா நிப்பாட்டும்”…. ஏன் நிப்பாட்டுறாங்கள் எண்டு தெரியாமலே பிரேக் போட்டார் முயாலார்.இதுல வேகம் 80 நீர் எத்தினையில போரீர் தெரியுதே..அடப்பாவமே இது வேகம் அளக்கும் கருவியா..ஊருக்க இன்னும் முழுசா ரேடியோவே வரலடா..இது வந்திருச்சே மனசுக்குள் திட்டினார் முயலார். “மன்னிச்சிருங்கண்ணை ஓட்டப்போட்டி அதால கொஞ்சம் வேகமா ஓடிட்டன்”..மன்னிப்பா தமிழில் பிடிக்காதாவார்த்தையே மன்னிப்பு எண்டுகொண்டே சைட் பெட்டிக்க இருந்த குற்றத்தாக்கல் பத்திரத்தை எடுத்து நிரப்பத்தொடங்கினார்.தம்பி ஓவர்ஸ்பீட்டுக்கு 1000 நிக்கசொல்லியும் ஓடி துரத்திப்பிடிச்சதுக்கு 500 எடும் பைனகட்டும்."அண்ணையான என்னட்ட காசில்ல.."
சட்டம் தன் கடமையை செய்யும்.. ஏறும் முன்னுக்கு.

இவ்வளவு நேரமும் மூச்சுவாங்க ஓடினவர் இப்ப பெற்றோல் ராங்கில குந்தி இருக்க இருசக்கர மேட்டர்வண்டி பரந்தன் காவல்துறையை அடைந்தது. "நாளைக்குத்தான் மன்றில முன்னிலைப்படுத்துவம் அதுவரையும் உள்ளயே இரும்." சொன்னார் தலைமைகாவலர்.கண் இருட்டியது முயலாருக்கு பற்பொடி வந்ததால் விடிந்தது…முன்னயதைவிடவும் மெதுவாக சென்றும் எல்லைக்கோட்டைத்தொட்டார் ஆமையார்.

நீதி > 
சரிவர முயலாமை தோல்வியைத் தரும்.
தன்னால் மட்டுமே முடியும் என்கிற மமதை தன்னையே கொல்லும்.
எவனுக்கு எது கிடைக்கோணும் எண்டிருக்கோ அதுவே அவனுக்கு கிடைக்கும்.


முயலாமை Version 2.0

காலம் 2013. மல்ரிபரல், மிக், கொத்துக்குண்டு எதுவும் முயலிட்டயும் ஆமையிட்டயும் வேகல.முள்ளிவாக்காலால தப்பி முகாமுக்க மாட்டுப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்தாலும் முயலாரின்ட மனதில மாற்றமில்ல.வெண்டே ஆகவேண்டுமெண்டு வெறி.அதாகப்பட்டது தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கைமரமேறி உயிரற்ற உடலை தன் தோளில் போட்டுக்கொண்டதாய் வன்மம் வளர்த்தது முயல். போன முறை காவல்துறையிட்ட ஓவர்ஸ்பீட்டில மாட்டினதால மிஸ்ஸாப்போட்டுது.ஆமையிடம் என் தோல்வியை நான் ஒப்புக்கொள்வதாய் இல்லை.இன்னுமொரு வாய்ப்புக்காய் காத்திருந்தது முயல்.இதுவும் நல்ல சந்தர்ப்பம் தான் ஒரே நாடு காப்பற் ரோடு நவநீதம்பிள்ளை வாரதால ஆனையிறவிலயும் பதிவில்லை.நூறுரூபா வெட்டினா பொலீசையும் சிம்பிளா சமாளிக்கலாம்..
காலம் கனிந்தது.ஆமையிடம் தூதுவிட்டது முயல்.ரோட்டை உயத்தினதால குளங்களுக்கு தண்ணிவரத்தின்றி தத்தளித்த ஆமைக்கு இது எனக்கு தேவையா என எண்ணிக்கொண்டது.போகாட்டி உவன் ஜெனீவா வரைபோவான் எண்டதால போனால் போகட்டும் என சம்மதித்தது ஆமை.மீண்டும் கொடிகாமச்சந்தி.இம்முறையும் கிளிநொச்சிய டிப்போ ஜந்திய(சந்தி) எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது.விடியவெள்ளன ஓடினா பொலீஸ்தொல்லை கொழும்பு பஸ்காரர் தொல்லை இல்லாமல் ஓடலாம் எண்டதால விடியவெள்ளனவே இருவரும் ஆரம்பஸ்தானத்திற்கு ஆஜர்…
இம்முறை நிதானமாய்தான் ஓடோனும்.கொடிகாம பொலீஸ் பளை பொலீஸ் ஐயக்கச்சிய பொலீஸ் பரந்தனுவ பொலீஸ் கிளிநொச்சிய பொலீஸ் நூறு நூறு ஐநூறு பொக்கற்றுக்க மாத்தி இருக்குதா எண்டு செக்பண்ணிக்கொண்டது முயல்.

ஒன்யுவமாக் செற் ரெடி கோ….

பெஸ்ட் கியரை போட்டு நிதானமய் கிளைச்சை விட்டார் முயலார்.கணிசமான வேகத்தில் நிதானமாய்தான் ஓடத்தொடங்கினார் முயலார்.ஆமையும் தன்னாலான வேகத்தில் நகரத்தொடங்கியது.முயல் முகமாலைகடக்கேக்கதான் ஆமை மிருசுவில் சந்தியை அண்மித்தது.ரோட்டுக்கு கிட்டவா கள்ளர்,கல்லெறிகாரர் பயத்துக்கு கேற்றுக்கு லைட் போட்டிருந்த வீட்டுக்கு கிட்ட வரத்தான் பாசையூரில இருந்து வந்து கொண்டிருந்த மோட்டர்சைக்கிள்ள மீன்யாவாரி கண்ணுக்கு லைட் வெளிச்சத்தில ஆமையும் அந்தமாதிரி தெரிய, ஆரம்பிச்சது ஆமைக்கு சனிமாற்றம். மீனே மாட்டாம இந்திய டோலர்படகுகாரங்களை திட்டிக்கொண்டு வந்தவருக்கு நல்ல பாலாமை.ஐஞ்சுகிலோவாவது தேறும் என எண்ணி நிதானமாய் வண்டியயை நிப்பாட்டி ஆமையாரைதூக்கி மீன் பெட்டிக்க போட்டுக்கொண்டார். “சே….. செல்லிலதப்பி செல்வனிட்ட மாட்டீட்டனே” என நொந்துகொண்டது ஆமை.பெற்றொல் இலவசமாய்க் கிடைத்தாலும் மண்ணெண்ணையில் பழக்கப்பட்ட எஞ்சினும் செல்வனும் ஊது பைப்பை எடுத்து வாயில்வைத்து ஊதியபடி கிக்கரை உதைத்தார்.
இடக்கிடை மக்கர் பண்ணினாலும் வாய்க்கும் காபரேட்டருக்கும் உள்ள கனெக்சனில வண்டி பறந்தது.பெட்டிக்க இருந்து ஆமையார் இடைவெளிக்கால ரோட்டைபாத்தபடியே வந்தார்.இயக்கச்சி கழிஞ்சு ஆனையிறவு வெளிக்க வரேக்கதான் “புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது வேட்டைக்காரன் வரதைப்பாத்து” பாட்டோட முயலார் ஓடிந்துகொண்டிருந்தார்.மூடியிருந்த உரபாக்க இழுத்துப்போட்டு ஆமை உரத்து சொல்லிச்சாம் முயலைப்பாத்து ‘மச்சான் செத்தாலும் சாவனேயண்டி செக்கண்டா வரமாட்டன்’’…சடிண்பிறேக் போட்ட முயலுக்கு கண் இருட்டியது///

நீதி > 
சரிவர முயலாமை தோல்வியைத் தரும்.
தன்னால் மட்டுமே முடியும் என்கிற மமதை தன்னையே கொல்லும்.
எவனுக்கு எது கிடைக்கோணும் எண்டிருக்கோ அதுவே அவனுக்கு கிடைக்கும்


தத்துவம்> காலங்கள் மாறலாம் But நீதி எண்னைக்கும் மாறாது///

Monday, October 27, 2014


வாரணம் ஆயிரம்






It’s easy. Just like driving a car. Having a good time… and don’t tell Amma Ok

நீங்க தான் என்ணோட Hero Dady.

……………….










என்ன exam

Dad.. Chemistry..
ம்ம்.. அப்புறம் லோக்கலா தெருவில நின்னு பொண்ணுங்க கூட பேசுறத பாத்தன்….
அது…  வந்து… Question Paper….

அது வேணாம்… உனக்கு வீடு சின்னதா இருந்தாலும் அழகா இருக்கு. வீட்டுல உக்காரவச்சு பேசு.. I have no problems…

நீங்க தான் என்ணோட Hero Dady.
……………………




எனக்கு எல்லாமே ஞாபகம் வருத்து டாடி..
உங்க அழகான முகம்
உங்க உடம்பு
உங்க குரல்
நீங்கதான் என்னோட எல்லாமே…

………………………

வாரணம் ஆயிரம் part 2

1996 .பல்லவராஜன்கட்டு. காட்டு விலங்குகள கலைசுப்போட்டு அதுகளின்ட இடத்துல நாங்க குடியிருந்த நேரம். ரயருக்க வைக்கோலும் துணியுமாய் உந்துருளிகள் உருண்ட காலம்.. அப்பா சங்கத்தில வேலை எண்டதால நாங்க உந்த விசயத்துல கொஞ்சம் வசதி..ரயரில பூ இல்லாட்டியும் காம்பாவது தெரிஞ்சது…தருமபுரத்தில தான் சங்கத்தலைமையகம் இயங்கினதால கிழமைக்கு ஒருதரம் தான் வீட்ட வருவார்…படிச்சு கிழிச்சதால வருட இறுதி பள்ளி விடுமுறை..இம்முறை அப்பாவோட தருமபுரம் போய் ஒரு உலக சுற்றுலாவ முடிக்க ஏற்கனவே போட்ட திட்டப்படி அப்பாண்ட சைக்கிள் பாரில ஒரு துவாய போட்டு ஆஜர்.
ஸ்கந்தபுரம் கழிய முன்னமே அப்பாவுக்கு மூச்சு வாங்கத்தொடங்கிவிடும்..ஒற்றகாலால போட்டுக்கொண்டிருந்த பெடல் இப்ப பாருக்கு(Bar) ரெண்டு பக்கமும் காலப்போட்டு முழு எஞ்சின் சக்தி கொடுக்க எனக்கும் மூச்சு வாங்கதொடங்கிவிடும்..
தருமபுரத்துக்கு சனமெல்லாம் இடிபட்டுக்கொண்டு இடம்பெயர்ந்தபடியால் உலக வர்த்தக மையமாய் மாறி இருந்தது.ரெண்டு பக்கமும் பிராக்கு பாத்துக்கொண்டு மிதிச்சதால உந்துருளி உலங்குவானூர்தியாய் பறந்தது…
கொத்துரொட்டியும் வாய்ப்பனும் வாழைப்பழமும் சங்க பேக்கறியில வறுத்த விஸ்கோத்தும் வாங்கிச்சாப்பிட்டே அப்பாண்ட அரைப்போக்கற் காலி.உவன வச்சிருந்தா தான் காலி எண்டு நினைச்சாரோ என்னமோ வெள்ளிக்கிழமை பின்னேரம்  நாங்கள் வீட்ட போவம் தம்பி….

அரைமனதோட மீண்டும் அப்பாண்ட சைக்கிள் பாரில் ஆஜர்..
பயணம் அக்கராஜன் சந்திதாண்டி கொஞ்சதூரம் வரைக்கும் சகஜமாத்தான் இருந்தது.ஜந்தாங்கட்டை காட்டுக்க வரேக்கதான் பொடார் எண்டு பின்சில்லு இடிச்சது.இவ்வளவு நேரமும் சர்ர் சர்ர் எண்டு நின்னுகோரி வர்ணம் இடைக்கிடை என்னைத் தேடி வரணும் பாட்டுக்கு வாற லைட்டிங் மாதிரி பத்திக்கொண்டிருந்த கெட் லைட் சேடமிழுத்து அடங்கிப் போச்சு….கும்மிருட்டு பாத்தனான் கும்மிருட்டு காட்டுக்குள்ள அண்டய்க்குத்தான் பாத்தன்.அப்பாவில பாசம் மெத்தி கைய இறுக்க பிடிச்சுக்கொண்டன்.
அப்பா…
ம்…என்ன தம்பி காத்துப்போட்டுது …நேரமும் பத்தரையாப் போட்டுது..என்ன கரைச்சலடா.. சரி வா உருட்டுவம்…யோசியாத விடியிறதுக்க வீட்ட போய் சேந்திடுவம்… இருட்டுக்குள்ளயும் அப்பாண்ட முகத்த தேடினேன்…
உலகத்திலயே அக்கராஜன் முழங்காவில் ரோட்டு பேமஸ்.அதில வாகனம் ஓடினா என்ன உருட்டினாலே International Driving licenses இப்பயும் குடுத்துக்கொண்டிருக்காங்கள்..எங்க கால் வச்சாலும் பள்ளமாத்தான் இருக்கும்.நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் சீக்காய் விசிலில அலேட் பண்ணிக்கொண்டு  முன்னுக்கு வாற சைக்கிள்காரரிட்டயும் வெளிச்சம் இருக்காது .செருப்பையும் சர்ர்க்கு சர்ர்க்கு எண்டு இழுத்துக்கொண்டு பணிஸ்மெண்ட்காரங்களுக்கு அவிச்ச புட்டு போல இருக்கிற கிறவல் ரோட்டில ஒரு மணித்தியாலமாய் உருட்டினம்.இவ்வளவுக்கும் எங்கள கடந்துபோன லாண்ட்மாஸ்ரர் ஒண்டும் மோட்டார் சைக்கில் ஒண்டும் சிறப்புபணி பஸ்சும் கிளப்பின கிறவல் புழுதியில ரெண்டு பேரும் வேசம் போட்ட செவ்விந்தியர் ஆயிருப்பம் எண்டு தெரியும்.எத்தின முறை சறுக்கினாலும் என் கைப்பிடியை விடவில்லை அப்பா..
அப்பதான் அந்த ஆச்சரியம்..மாடு மேய்த்த இடையர்களுக்கு வானிலே தோன்றிய ஒளியாய்…காட்டுக் கரையிலே குப்பிவிளக்கோன்று காற்றுடன் போராடிக்கொண்டு தன் இருப்பைக்காட்டியது.அந்த வெளிச்சத்திலும் பி.சி.சிறிராமின் படங்கள்ள தெரியிற மாதிரி நாலு பழைய ரயருக்குள்ள ஒரு பலகையில சுண்ணாம்பால தூய தமிழில் ஒட்டகம்.இங்க பெயர்ச்சொல் இல்ல வினைச்சொல்..அதுவா முக்கியம்.
நாலு காட்டுக்கப்பு வெயிலும் மழையும் ஒழுகாமல் இருக்க எதையெல்லாம் செருகலாமோ அதயெல்லாம் மண்டையால யோசிச்சுப்போட்ட கூரை பற்றிப்பெட்டிக்க தண்ணி ஒரு சுத்தியல் நாலு சாவி குறடு ரயர் கழட்ட ரெண்டு வளைஞ்ச கம்பி ஒரு சொலுசன் ரின் ஒட்டகம் ரெடி..
ரொம்ப அடி வாங்கின சாறம் இப்பதான் கழட்டி கப்பு கெவத்தில மாட்டின உதுல ஒரு அலுவலுக்கு போட்டு வந்து தொங்குற நீலகலர் சேட்டு கையில ஒரு பீடி அத இழுத்ததால வந்த இருமலோட ஒரு கிழவர்… இல்ல இல்ல எமக்கு மேய்ப்பர்..அப்பாடா இவ்வளவு நேரமும் பட்டு வந்த கஷ்டத்துக்கு ஒரு குப்பி விளக்கு வெளிச்சம் கிடைச்சுட்டுது. அப்பா என்ணண்டா விடியிறதுக்குள்ள வீட்டுக்கு நடந்தே போயிடலாம் எண்டார்.. மனதுக்குள் நையாண்டி பண்ணிக்கொண்டேன்.
க்கூம்.. என்ன காத்துப்போட்டுதே… இருமலோடயே கேட்டார் கிழவர்.
என்னட்டத்தானே வரோனும்.இந்த எட்டுப்பட்டி ஜில்லாவிலயே ஆலின் ஆல் அழகுராஜா நான் தான் என்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு கடைசி ரெண்டு இழுவை தான் வரும்வரை நாம் காத்திருப்பதற்காக வட்டம் வட்டமா விட ட்ரை பண்ணினார்.கடசியா விட்ட புகையோட இருமலும் சேர்ந்து ஐயா கிபீரும்(கசிப்பு) அடிச்சிருக்கார் எண்டத குண்டுபோட்டுக் காட்டியது.
கரியல்ல இருந்து பாய்க்க(Bag) எடுங்கோ..
காண்டில இந்தப்பக்கம் திருப்புங்கோ…
சாவிப்பெட்டிய இங்க அரக்குங்கோ…
ஏகப்பட்ட கண்டிசன்கலோட சைக்கிள் கசாப்பு கம்பியில தொங்க விட்டு பின்சில்லு பக்கமாய் ஒரு பலகயபோட்டு குந்தினார்.
வளைஞ்ச கம்பிய ரயருக்க விட்டு ரிம்மில இருந்து ரயர கழட்டின வேகமே கிழவன் எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆள்தான் எண்ட தோரணையில் அப்பா என்னைப்பார்த்தார்.
கண்ணைக்கட்டி விட்டாலும் ரியூப்ப கழட்டுவன் தம்பி… உள்ள போன கிபீர் கதைத்து எங்களோட…
என்ட ஐ.சி யிலயே தொழில் எண்ட இடத்தில சைக்கிள்கடை எண்டுதான் போட்டிருக்கு என்ன..
!!!!!!!
நேத்தும் இப்படித்தான் ரெண்டு பேர் ஒண்டா காத்துபோய் ரீயூப்பு கிழிஞ்சு வந்தினம்.நான் அந்தமாதிரி வைக்கல் அடைஞ்சுகுடுத்தனான் என்ன…
ரயரில இருந்து ரியூப் வந்திட்டு
யாழ்ப்பாணத்தில திரவியம் கடை எண்டு கேட்டா சகலரும் சொல்லுவினம் என்ன…
தம்பி பம்மை எடும்.பற்ரிப்பெட்டிய இங்க தாரும்..
நான் குப்பிவிளக்க தூக்கிப்பிடிக்க கண்ண டிம்பண்ணி டிம்பண்ணி தண்ணீக்க ரியூப்ப அமத்தி சுத்தி சுத்தி பாக்க ஒரு இடத்தில ரயர் மூச்சுவிட்டது.இந்தா இருக்கார் மச்சான்…சொந்தம் கொண்டாடினர் கிழவர்.
எனக்கு உந்த தண்ணி தேவயில்லை வாயில வச்சுப்பாத்தே ஓட்டயகண்டுபிடிப்பன்..
நாங்கள் ஆச்சரியமாக பாத்தது கிபீர உசுப்பேத்திவிட ரஜனி ஸ்ரைலில் காலுக்கால ரியூப்ப கொழுவி பின்பக்கத்தால எடுத்து சப்பாணம் கொட்டி நிலத்தில இருந்தார்.சாவிப்பெட்டீக்க கையவிட்டு துலாவி ஒரு மொட்டை வாள்பிளேட்டை எடுத்து ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாட்டு தாளத்துக்கு ராவத்தொடங்கினார்.எப்பதாண்டா முடிப்பான் என்கிற ஆவலோட வித்தைக்காரன் குரங்கைவிட்டு சுத்திறதபோல ஆஆவெண்டு பாத்துகொண்டிருந்தேன்.அலாவுதீன் விளக்குபோல சொலுசன் ரின்னை பக்குவமாய் திறந்து துளியாய் கையிலெடுத்து மனமாய் பூசுற மாதிரி பெரிய வட்டம்போட்டுக்காட்டினார்.பின்னுக்கு ஸ்ரைலா திரும்பி ரியூப்போண்டில ஒட்டுப்போட சின்னத்துண்டொண்டை வெட்டி அதயும் ராவி சொலுசன் தடவி பஞ்சர் மேல ஒட்டுப்போட்டு முடிஞ்சுது அலுவல் எண்ட பீலோட நிமிர்ந்து பார்த்தார் கிழவர்.
அப்புறம்…. எந்த ஊர் எங்க செல்லடி எங்க கடலுக்க சண்டை எத்தின ஆமி செத்தது எண்டு சொலுசன் காயிறவரைக்கும் விடுப்புக்கதை நீட்ட வெளிக்கிட்ட கிழவனை கெதியாய் முடியுங்கோய்யா எண்டு அப்பா கேட்டதால இப்ப முடிஞ்சிடும் எண்டு காலுக்க கொழுவியிருந்த ரீயூப்ப எடுக்கதான் தெரிஞ்சுது பாழ்பட்டகிழவன் ஒட்டுப்போட வெட்டினதும் இதே ரியூப்பிலதான் எண்டு ஒருகணம் வடிவேல்கணக்கா அப்பிடியே சாக்காயிட்டேன்…கிழவர்ட முகத்தில இதுவரை தாண்டவமாடிய கிபீர் கட்டுப்பாட்டை இழந்து எங்கோ தரைதட்டி இறங்கியது …
ஐயா ரியூப்பின்ட விலை ரெண்டாயிரம் குடுத்தாலும் வாங்கேலது இப்பபோய் இப்படி பண்ணிப்போட்டியலே…. முகத்தில் எரிச்சலை வெளிக்காட்டாமல் அப்பா.
ஐயோ.. மன்னிச்சுடு ராசா… ஓமெண்டா வைக்கல் அடைஞ்சு தரட்டே..
!!!!!!!
வா தம்பி இவ்வளவு நேரமும் ரியூப்போட உருட்டினாங்கள் இப்ப கொஞ்சம் பாரம் குறைஞ்சிருக்கும் வடிவா உருட்டலாம்.நீ பாரில ஏறி இரு நான் உருட்டுறன்ஆச்சரியமாய் அப்பாவின் முகத்தைப்பார்த்தேன்…


நீங்கதான் அப்பா என்னேட HERO…




Thursday, March 6, 2014

மேடைக்கூத்து




மாணவர் எழுச்சி நாளுக்கு எங்கட பள்ளிகூடத்தால நாடகம் தரட்டாம்..‘
ஆறுமுகதாஸ் அதிபர் வேட்டி மடிப்பை இழுத்துக்கொண்டெ.

‚‘‘ஓம் சேர்..ஆன ஒண்டும் வருதுகளில்லை.சுத்திப்போட்டு ஓடுதுகள்.‘‘
தில்லானா டீச்சர்.

‚‘‘ஓயல் ஏயல் காரர விட்டிட்டு ஒம்பதயும் பத்தயும் புடியும்.ஒண்டு ரெண்ட இல்லாம முழுத்தயும் கொண்டு போய் பழக்கும்.இல்லாட்டி கிரவுண்டில மிச்சம் நிக்குங்கள்‘‘ ஆறுமுகதாஸ் அதிபர்
***.
‚‘‘ஒம்பது பத்து வகுப்புகாரர் எல்லாரையும் தில்லானா டீச்சர் ஆலமரத்துக்கு வரட்டாம்ம்ம்ம்...‘‘‘ தண்டோராகாரன். ஒவ்வொரு பள்ளிகூடத்துக்கும் குறஞ்சது ரெண்டாவது இந்த கேஸ் இருக்கும்.எப்படா பிரச்சாரகாரர் வருவாங்க..எப்படா வகுப்பு குழம்பும் எண்டு இருந்த எங்களுக்கு அந்தமாதிரி .
***-


கனகபுரம் மகா வித்தியாலயம் , உருத்திரபுரம் மகா வித்தியாலயம் , ஸ்கந்தபுரம் இலக்கம் 02 பாடசலைகள் ஒரே காணியில் ஒரு கிரவுண்ட சுத்தி குடியிருந்த காலம்.எந்த புள்ளயள் எங்க படிக்குது எண்டு ஒரு புள்ளயாலயும் கண்டு புடிக்கேலாது.இடவேள மணி அடிச்சுதெண்டா கிறவுண்ட சுத்தி மணியிலயாண் கணக்கா மோச்சுப்போய் இருக்கும்.ஒரு புட்போல் போஸ்ட்க்கு நாலு கீப்பர் நிப்பினம்.நாலு மச் ஒரே நேரத்தில ஒரே கிரவுண்டில நடக்கும். அதுவும் விளையாடினா பந்து ஊத்தயா போகுமெண்டு ஆறுமுகதாஸ் அதிபர் தரமாட்டார்.கிரிக்கட் பந்தில தட்டி தட்டி கொண்டு போக பெல்லுமடிக்க சரியா இருக்கும்.அப்பிடியெ மொச்சுக்கோண்டு கிணத்தடிக்கு ஓடினா கால் வைக்க இடமிராது.அடுத்த வாளிக்கு கயித்தில புடுங்குபடுறதிலயே வெறும் வாளிதான் வந்து சேரும்.தீத்தம் மாதிரி ரெண்டு சொட்டு வாய்க்க விட்டுகொண்டு வகுப்புக்கு ஓட வேண்டியதுதான்…

***.
ஆலமரத்தடியில நாப்பது பிள்ளைகளுக்கு கிட்ட தில்லானா டீச்சரை மொச்சுக்கோண்டு….
டீச்சர் கையில ஒரு கட்டு பேப்பர்…நாடக ஸ்கிரிப்ட்டாம்..
இதுக்கு நாலு பேர்,இதுக்கு பத்துபேர்,இதுக்கு ஒராள்….
டீச்சர் பிளான் பண்ணுரா…
விலத்தி நில்லுங்கோ … தெரியுதில்ல..
கையில தடி.
மச்சான் உதுக்க போனா அவளவுதான்.பின்னேரம் வா காலம வாவெண்டு கிளிஞ்சுது கத.பேசாம பின்னுகே நிப்பம்  சதீசன் சொல்ல நண்பர்கள் சிலர் சேர்ந்துகொண்டோம்.
சரி எல்லாரும் இங்கால வாங்கோ…
இது தான் கத. டீச்சர் விளங்கப்படுத தொடங்கினா…
ப்பூ..மோக்க நாடகம்.இத தானே எல்லாரும் உருட்டினம்.வீதி நாடகதிலேந்திருந்து புலிகளின் குரல்வரை.அதுசரி இத விட்டா வேரென்ன இருக்க போகுதுதெண்டு முகத்த சுளிச்சா டீச்சர்ட முழி பெரிசாகிடும்.

இந்த மேடைய மூண்டா பிரிக்க போறம்.(மூன்று களமாம்.)ஒண்டில கொழும்ப காட்டபோறம்.ஒண்டில தமிழ்ச்சனத்த காட்டபோறம்.மற்றது கதை சொல்லுற ஆள்.(கதய சொல்லாட்டி சனத்துக்கு விளங்காதுகாணும்)
நடு நடுவே நாட்டியகாரர்..(இது வேறயா?இப்பவே கண்ண கட்டுதே..)
டான்சுக்கு பிரச்சனை இல்ல எங்கட ஆஸ்தான நர்த்தகிகள்…(அதுகள் போரம்மா போரம்மா தொடங்கி சினிமா சோக பாட்டுக்கெல்லாம் கிளாசிக்கல் ஒரேமாதிரி ஆடுங்கள்.)
கத சொல்லுற ஆளுக்கு உமாமகேஸ்வரி..(விட்டால் ஆளில்லை.முகத்தில பாவம் காட்டுறதில)
கொழும்புக்கு சந்திரிக்கா,ஜே.ஆர், பிரேமதாஸா,ரத்வத்த(அவர் இல்லாம எந்த நாடகமும் கிடையாது)
மிச்சத்துக்கு சனம் ஒரு பத்து பேர் காணும்.அப்பதான் அதிபர் சொன்னது ஞாபகம் வர இல்ல மிச்சம் எல்லரும் சனம்.சரியா….

சந்திரிக்காவுக்கு திவ்வியா நடி.நீதான் வெள்ளை. ஜே.ஆர்ருக்கு ஆருக்கு மூக்கு நீட்டு???

சதீஸன் டீச்சர்……  மாட்டினாண்டா…
இல்ல டீச்சர் நான் மாட்டன்.நான் நடிக்கமாட்டன் வெணுமென்டா இவன விடுங்கோ… என்னைக் காட்டினான்.

இல்ல அவனுக்கு மூக்கு சப்பை நீ தான் வா..
என் மூக்கால் ரத்தம் கசிந்தது. சதீஸன் இருடீ….
பிரேமதாஸாவுக்கு ஆர போடலாம்..ம் ம் ம் பளிச்சிட்டது டீச்சருக்கு வசந்தன் எங்க…
கறுவல் உன்ன வரட்டாமடா…(சேம் பிளட்)
1000 வால்ட் பல்ப் பல்லில் எரிய பின்பக்க கலுசான் மண்ண தட்டிகொண்டு போனார்.
அப்பாடா தப்பிச்சன்..இப்படியே எஸ்கெப்பாகிட வேண்டியது தான்.
சனத்துக்கு எல்லாரும் வாங்கோ..
அடச்சீ…
நீ அப்பா, நீ அம்மா நீ கிழவன் நீ கிழவி நீ காயபட்டவன், நீ மாணவன்(பர்போமன்ஸ் பண்ண கரக்ரர் எனக்கு), நீ ….
சரியோ,,,
காலேக்கர் காணியில அரைவாசிக்கு தடியால சதுரம் போட்டாச்சு.இதுதான் மேடை…(அவளவு சனத்தயும் அடக்கோணுமே.)
ஸ்கிரிப்ட் இது தான்.கொழும்பு வட்டத்துக்க ஒரு கதிரய நடுவுல வச்சு ஆட்சியாளர்கள் சுத்தோணும். அவய் சுத்தேக்க சனம் ஸ்டில்ல நிக்கோணும். கதை சொல்லுவர் கதைகேக்க சனமும் ஆட்சியாளர்களும் ஸ்டில்ல நிக்கோனும் இவ ரெண்டு பேரும் ஸ்டில்ல நிக்கேக்க சனம் மெதுவா சிலோமோசனில எலும்பி நெஞ்சில அடிச்சடிச்சு அலறோணும் .சனத்துக்கு ஒரெயோரு வசனம் தான் கையில ஒரு குழந்தய வச்சிருக்க மாதிரி பிடிச்சு கொண்டு ஆட்டி ஆட்டி ‚‘‘ ஏன் எங்கள கொடுமைப்படுத்துரீயள்          நாங்கள் என்ன பாவம் செய்தோம்                        நாங்கள் தமிழராய் பிறந்தது குற்றமா             எங்களுக்கு விடிவே வராதா?‘‘   அப்ப கையில வாளும் பின்னால வாலும் தலையில ஒரு சட்டி தொப்பி நாக்க வெளியால தொங்க போட்டுகொண்டு கால அகட்டி அகட்டி வெற்றுகிரகவாசிகணக்கா ஒருத்தன் கிபீர் சத்தம் போட்டுகொண்டு வந்து சனத்த அடிக்க எல்லோரும் குய்யோ முறையோ எண்டு கத்திகொண்டு கீழ விழவேணும்.
ஒவ்வொரு சீனும் மாறேக்க ஒரு பாட்டு 

தையா தக்க தையா தக்க
காட்சி மாறுது ஆட்சி மாறுது
காலம் மாறவில்லை எங்கள் கோலம் மாறவில்லை.
தையா தக்க தையா தக்க
தையா தக்க தையா தக்க

வசந்தன் நல்லா கால தூக்கி ஆடும் பாப்பம்.(நமட்டுச்சிரிப்பு)
வேட்டி விடுதில்ல டீச்சர்..

இடக்கிடை நர்த்தகிகள் வந்து கையாலயே ஏ.கே47,பிஸ்டல்,அட்லறி,கிபீர்,ஐஞ்சிஞ்சி எண்டு முத்திரை பிடிச்சு ஆடீட்டு போகுங்கள்.(டான்ஸின் எந்த சிலபஸில இது கிடக்குதோ தெரியாது)
கடசியா ஒரு வரிபோட்டவர் வந்து சனத்த அள்ளிக்கொண்டு போக எல்லரும் மேடைக்கு முன்னால வந்து இருகரம் கூப்பி வணங்க,
நன்றி வணக்கம்.
பாருங்கவன் நூறு மேடை எண்டாலும் ஏறும்… டீச்சரிண்ட எதிர்பார்ப்பு.

இத நாடகமெண்டு ஒரு நாளில்லை ரெண்டு நாளில்லை பத்து நாள்.பக்கத்து பொது பாத்துரூம் மணக்க மணக்க ஆலுக்கு கீழ் வச்சு பழக்கினாணுங்கள்,இடக்கிட ஒவ்வொரு வாத்தியா வந்து பாக்க திரும்ப திரும்ப ஆடிக்காட்டி…முடியல..
*****.

ஆறாந்திகதி ஆறுமணிக்கே வந்துடுங்கோ எங்கட மூண்டாவது நிகழ்ச்சி.சரியே…. உங்கட உங்கட கொஸ்டியூமுகள மறக்கம கொண்டந்திருங்கோ சொல்லிபோட்டன். கோயில் மாடு ரியக்சன்.

ஆய்… யாருசனம் வரப்போது.ஆறுதலா போவம் சொன்னனேரத்துக்கு எப்பாச்சும் நிகழ்ச்சி தொடங்கியிருகே.வாடா அனுசில வடை சாப்பிட்டுபோவம்.ஒரு நாள் ஜனாதிபதி எண்ட புழுகத்தில வசந்தன் தான் பில் குடுத்தான்.

ஸ்கந்தபுரம் முருகன் கோயிலுக்கு போகமுதலே ஸ்பீக்கர் அலறியது. மாணவர் நாள் எண்டு வெள்ளை சீலையில பெணர்.சிவப்பு மஞ்சள் கொடிகள்.பங்சன் சிறப்பாதான் இருக்குமோ..நாமதான் பிழையா எடை போட்டிடமோ..
என்னடா விலத்தேலாத சனமா இருக்கு.புதினம் பாக்கிறத்துக்கே பிறந்திருப்பாங்க போல…
அதுக்க ஒரு சிறுசு அந்தா போரார்  பிரேமதாசா,,,,,,
பாவிபயல் வேலிக்கயாலேயே நாடகம் பாத்திருப்பான் போல.,,
மச்சான் நீ இனி பேமஸ் தான்.உனக்கு ரசிகர் எல்லாம் கூட போகுது.

விர்டா விர்டா..

ஆனா மச்சான் டீச்சர் சொன்ன மாதிரி நல்லா கால தூக்கி தூக்கி ஆடு என்ன.
என் அட்வய்ஸ் அவன் காதிலயே விழல.

VIP பாஸ்காரர் மாதிரி சனதுக்குள்ளாலயே சைக்கிள்ள மேடைக்கு பின்னால விட்டோம். படங்கால சுத்தி பின்னுக்கு மறைச்சிருந்தார்கள்.மேக்கப் ரூமாம்.ஐஞ்சுமணிக்கே டான்ஸ்காரியள் சலங்கயோட ரெடி.இன்னும் ஜடைவேலை பாக்கி இருந்தது.
நல்லவேளை மச்சான் பொடியனா பிறந்தது.ரெண்டு நிமிச ஆட்டத்துக்கு பார் அலப்பறய…
அப்பதான் கவனிச்சன் மேடைய..  


பட்ஜெட்ல பிரச்சனை போல ஒரெ ஒரு மிசின் பெட்டிதான் மேடை.அட அதில ஒரு வில்லுபாட்டு நடத்தினாகூட கடத்தை வெளியாலதான் வைக்கோணும்.எங்கட நாடகத்த எப்புடி இதில..
டீச்சர் மேடை காணாது போல கிடக்கு….

பேசாம இரும்.கொஞ்சம் அஜஸ்ட் பண்ணி நிண்டுகொண்டு நடியுங்கோ…
டான்ஸ்காரியள மேக்கப் போடுறதயே குறியாய் நிண்டுகொண்டு.
பாத்திரங்கள இனி குறைக்கேலாது எல்லா பாத்திரமும் முக்கியம் தான் நாடகத்தில..டீச்சர்.
சே.. கடசி நேரத்திலயும் மிஸ்ஸாப்போட்டுது.

****.
மாலை 8,00 மணி
அன்பான ரசிகப்பெருமக்களே இதோ நீங்கள் ஆவலுடன் எதிர் பாத்து காத்திருந்த மாணவர் எழுச்சி நாள் நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன.மைக் ரெஸ்ட் ஒண் டூ ..ஒலி வாங்கி பரிசோதனை ஒன்று இரண்டு
இதோட பத்தாவது தரம் சொல்லிபோட்டான்.
முன்னுக்கிருந்து மேடைய அண்ணாந்து பாத்தே களைத்துபோய் நித்திரை தூங்கின ரெண்டு திடுக்கிட்டு எழும்பி பிறகும் வேறும் மேடைய மட்டும் பாத்துகொண்டிருந்ததுகள்.
அடுத்த தரம் சொல்லத்தான் நிகழ்ச்சி தொடங்கும் பாரன் எண்டு ரெண்டு கச்சான் சுருலுக்கு பேற் கட்டிகொண்டதுகள்.
பனீக்க காச்சல் வந்தாலுமெண்டு பெருசுகள் துவாயால தலயபோத்திக்கொண்டு இடத்தவிட்டு ஆணி அடிச்சபோலயெ நகராம இருந்ததுகள்.

ஒரு சனத்தயும் ஏமாத்தாம நிகழ்ச்சி 9மணிக்கு ஸ்ராட்.
முதலாவது நிகழ்ச்சியாக மத்திய கல்லூரி மாணவர்களின் எழுச்சிப் பாடல்கள்…
மூக்கால ரெண்டு பாடிப்போட்டு போச்சுதுகள்.
கை தட்டல்..கரகோசம்..கூக்காட்டல்…நாலஞ்சு விசில்…
அடுத்த நிகழ்வாக அக்கராயன் மகா வித்தியாலய மாணவர்களின் அசைவும் இசைவும்.போரம்மா பாட்டுக்கு கறுத்த உடுப்போட எக்ஸ்சசைஸ்.
கை தட்டல்..கரகோசம்.. கூக்காட்டல்… நாலஞ்சு விசில்….
ஆம் அடுத்த நிகழ்வாக நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த கனகபுரம் மாணவர்களின் நாடகம், விழ விழ எழுவோம்ம்ம்ம். புல் எக்கோ,,,,, கோ,,,, கோ,,,,

*******-

திரை மூடப்பட்டுள்ளது,
மைக் ஒன்
நாயே இங்கவா.. நீ சனமெல்லே இதுக்க நில்,நீ தள்ளிப்போ தள்ளிப்போ..

எங்க போறது மேடைக்கு வெளியாலதான் போகோணும்,

மோதகம் முதுக காட்டம நில்லுடா..

பட்டபேர சொல்லாத எண்டு உனக்கு சொன்னான் வாங்கபோரார்.
சொன்னான் பத்துபேர் சனத்துக்கு காணுமெண்டு.அதிபர் தான்..டீச்சர் அப்ப தான் அலுத்துக்கொண்டா..
அரசாங்ககாரர் இஞ்சால சனப்பக்கம் வராதயுங்கோ..பாக்கிற சனம் குழம்பீடும்.ஒக்கே ரெடி.
முழுச்சம்பாசணையும்  கரும்புத்தோட்டவாய்க்கால் வரை கட்டி இருக்கிற ஸ்பீக்கர் வெளிச்சம் போட்டிருக்கும்..

****.

திரை விலகத் தொடங்குகிறது.முன்னுக்கு கட்டியிருந்த போக்கஸ் லைட் ஒண்டயும் முன்னுகெங்களுக்கு தெரிய விடாமல் பண்ணியிருந்தது.சனம் பாக்குதா இல்ல எழும்பி போயிட்டுதுகளா ஒண்டும் தெரியெல்ல.மேடையில வேற நிக்க இடமில்ல.சனத்துக்கு நடிச்சவன் ஒருவன் இடமில்லாமல் சந்திரிக்காவோட ஒட்டிகொண்டு நிக்க கீழ இருந்து ஆரோ பங்கேர்டா ஒருத்தன் அரசாங்கத்தோட சேந்துட்டான்.துரோகி
ஸ்கிரிப்ட்ல இல்லாத பாத்திரமெல்லாம் கூட்டம் அனுமாணிக்க தொடங்கீட்டு.எல்லாம் இந்த மேடயால வந்த குழப்பம்.

உமாமகேஸ்வரி தொடங்க நாங்களும் ரியக்சன் பண்ண ஆரம்பித்தோம்.

இது ஜெ.ஆர் காலம்…. 
 
தையா தக்க தையா தக்க
காட்சி மாறுது ஆட்சி மாறுது
காலம் மாறவில்லை எங்கள் கோலம் மாறவில்லை.
தையா தக்க தையா தக்க
தையா தக்க தையா தக்க

இப்ப வால்,வாள் என்ரி(entry)..
வெளியால நிண்டு ஒருத்தன் ரீரெக்காடிங்.வாய்க்க மைக்க ஓட்டிகொண்டு கிபீர் சவுண்ட் விட நாங்கள் விழவேணும்..
ஒரு செக்கண்ட் லேட். எல்லாம் இடம் பிடிச்சுவிழுந்துட்டுதுகள்.ஐயோ விழ ஒரு இடம் கிடைக்கேலயே எனக்கு…
தேடினேன் தேடினேன் மேடை மூலைவரை தேடினேன்.ஒரு போட்டுக்கூட கிடைக்கல.ஆகா நாடகமே மாறப் போகுதே…
கந்தபுர முருகா, மண்ணெண்ணைப் பிள்ளயாரே காப்பாத்து… கண்ணை மூடிக்கொண்டு பொத்தெண்டு விழுந்தேன்.
என்ன ஆச்சரியம் ஒரு நோவும் இல்ல முழிச்சுப்பாத்தா தனலட்சுமிக்கு மேல…

+++++

விருமாண்டி படத்தில ஒரு சீன் வரும்,தலைவரும் அபிராமியும். தலைவர் அந்த டோச்லைட்ட கீழ போடுவார்.அது அங்கயும் இங்கயும் ஆடி கடசியா களச்சுப்போய் ஒரு இடத்தில நிக்கும்--
ஓப்பிண் பண்ணினா ரெண்டுபேரும் மூச்சிலயே கதைப்பினம்.


+++++

சொரிடி நான் விழ இடமில்லாமல் போட்டுது அதுதான்..
கண்ணாலயே பறுவாயில்ல சொன்னாள்.
கோவமா..

ம்கூம்..

பாரமா இருக்கிறனா..

இல்லடா…

ஏன் மூக்கு குளிருது….

பனிதானே…

ம்ம்ம்

கண்ணுக்கு கீழ சின்னதா எதோ…

அது மச்சமடா…

ஓ….

இண்டைக்கு மீன்தானே சாப்பாடு…

ம்ம்ம்.எப்புடி தெரியும்.

இதென்ன நீர் போட்டது சந்தன பவுடரேண்டே எனக்கு தெரியும்…

ச்சீ…
பின்னணியில இளையராஜா மியூசிக்…

நீபார்த்த பார்வைக்கொரு நன்றி…நமைச்சேர்த்த மேடைக்கோரு நன்றி..அயராத இரவு சொல்லும் நன்றி நன்றி….

நர்த்தகிகளின் டான்ஸ்….
அரசாங்கத்திட்டவிட இதுகளிட்ட சனம் அதிகமா உளக்குப்பட்டுதுகள்..

‚‘‘தையா தக்க தையா தக்க
காட்சி மாறுது ஆட்சி மாறுது…‘‘.
மெதுவா மெதுவா எழும்பி அவளை விடுபட வேண்டியதாப் போச்சு…
சே இந்த காட்சிய கனநேரம் வச்சிருந்துக்கலாம்..

………
…….
தையா தக்க தையா தக்க
காட்சி மாறுது ஆட்சி மாறுது……

சந்திரிக்கா ஆட்சி…
பிரியாவையே டாக்கட்பண்ணி பின்னாலயே துள்ளிக்கொண்டு.
எப்புடியும் லேட்டாத்தான் விழவேணும்.

*******.

நன்றி வணக்கம்

மேடைக்கு பின்னால வர,
வசந்தன் கேட்டான் ‚‘‘மச்சான் துள்ளேக்க கால் நோகுதுடா.அடுத்தமுறை நீ ஜெ.ஆருக்கு வாவன் நான் மாணவனுக்கு நடிக்கிறன்.

ஆகா.. கண்ணுட்டானே சூட்சுமத்த கண்ணுட்டானே…..