வன்னியின் இடப்பெயர்வுக்கு பின்னரான மக்களின் பொருளாதார நிலையை எடுத்தியம்பும் கொட்டகை அமைப்பிலான வீடமைப்பு. கிடுகினால் வேயப்பட்டு அதன் உக்கல் தாங்க முடியாமல் நீலக்கலர் இலவச தறப்பாலினால் வேயப்பட்ட அந்த குடிலுக்குள் இருந்து காட்சி விரிகிறது.
வெளியே மழை பெய்து கொண்டிருப்பதற்கான பின்னணி சத்தத்துடன் ஆரம்பிக்கும் முதல் காட்சி, தறப்பால் கிடுகையும் தாண்டி ஆங்காங்கே ஒழுகும் மழை நீரை, சாணத்தினால் மெழுகப்பட்ட மண்நிலம் சந்திரன் மேற்பரப்பு போல் ஆகி விடாமல் இருக்க சமையல் பாத்திரங்கள் போராடிக் கொண்டிருக்கும் பின்னணிக் கதை சொல்லும் குளோசப் காட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது.
35 வயது மதிக்கத்தக்க அடுப்பு வெக்கையில் நெற்றி வியர்வை கன்னம் வரை வழிந்த, நெற்றிப் பொட்டற்ற அந்தக் காலப்பகுதியில் சராசரி பெண்களின் இயல்பையோத்த அந்தப் பெண் மாவை குழைத்துக் கொண்டு ஒருமுறை அந்த மூலையை நோக்கி சிறு முறாய்ப்பு பார்வையை விட்டு மீண்டும் மாவை பிசைவதில் ஈடுபடுகிறாள்.
கேமரா கோணம் இப்பொழுது அவள் முறைத்துப் பார்த்த அந்த மூலையை நோக்கி மாறுகிறது. அங்கே 7 வயது மதிக்கத்தக்க பள்ளிக்கூட நீலக்கால்சட்டை வெறும் மேலுடன் அந்த மெல்லிய தேகத்தைக்கொண்ட சிறுவன் குறுகிப்போய் கொட்டிலின் வளைக்கப்புடன் சாய்ந்து இருந்து தாயைப் பார்த்த வண்ணமே இருக்கிறான்.
உரையாடலற்ற இந்த இடைவெளி சற்று முன்னர் சம்பவம் ஏதோ நடந்துள்ளதை எம் ஊகத்திற்குவிட்டு காட்சி நகர்கிறது. இருவருக்கிடையிலான இந்த இடைவெளி மவுனத்தை மழையின் சத்தமும் இடியின் சத்தமும் இசையாய் நிரப்பிக் கொள்கின்றன.
இன்னொரு முறை அவன் முயற்சிக்கிறான்
"அம்மா... குடை.."
மாவை கொத்திக் கொண்டிருந்தவள் அதை நிறுத்தி..
" தம்பி சொல்லிப் போட்டன் இனி வாங்கப் போறாய்.. உனக்கு எதுக்கு இப்ப பெரிய குடை? "
பெரிய குடை என்பதில் அவள் பொருளாதார இயலாமை அமுங்கிப் போய் இருப்பது அவள் முகத்தின் குளோசப்பில் தெரிகிறது.
வாடிய முகத்துடன் கண்கலங்கி சாய்ந்திருந்த அந்த சிறுவனின் பின்னிருந்த அந்த வளைக்காப்பின்வழியே நேர்கோட்டில் மேல்நோக்கி கேமரா பயணிக்கிறது. அந்த மரக்கப்பின் பாதியில் சிறு பலகைத்துண்டில் சட்டம் போட்டு அதில் சாய்த்து வைக்கப்பட்ட தந்தையின் போட்டோ, அருகில் சிறு விளக்குத்தீபம். போட்டோவில் வீரவணக்கம் இருபுறமும் பிறப்பு, வீரகாவியம் மற்றும் எல்லைப்படைவீரன் இளமாறன் என சிவப்பு எழுத்துக்கள்.
"அம்மா குடை"
மீண்டும் அதே கெஞ்சல் குரல்.
இயலாமை விளிம்பில் நிற்கும் அவள் தன் கணவனின் படத்தைப் பார்க்கிறாள். அவள் பார்வை கோணத்திலிருந்து கேமரா சூம் (soom) போய் அந்தப் படத்தில் இளமாறன் முகத்தில் நெருக்கமாய் நிற்கும். அந்த முகத்திலிருந்து பின்னணி காட்சி படர ஆரம்பிக்கும்.
" நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலுமப்பா என்ர பிள்ளையை நான் கஷ்டப்படாமல் வளர்க்கோணும். அவன் ஆசைப்படுற எல்லாம் வாங்கி குடுக்கோணும். நான் வேற தொழில் செய்றத விட நாட்டை காக்கிற தொழில் செய்யிறது தான் எனக்கு சந்தோசம். அதனாலதான் நான் எல்லைப்படைக்கு போகப்போறேன். "
###
அடுத்த காட்சி கிளிநொச்சி நகர் பிரதான வீதியில் நெருக்கமாக இருக்கும் வணிகக்கடை தொகுதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கிளிநகரின் அப்போதைய ஓர் உயரமான தனியார் கடையின் மேலிருந்து அந்த காட்சி இயல்பாக படமாக்கப்படுகிறது. இந்தப் பின்னணி இசையும் இல்லாமல் வாகன இரைச்சலும் சனங்களின் சத்தங்களினிடையே அவள் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குவதும் எதையோ வாங்கும் நோக்கமாக தேடுவதுமாக நகர்கிறது.
ஐநூறு ரூபாய்யக்கா....
குறைக்கேலாதாண்ணை.....
###
படலையை திறந்து கொண்டு உள்ளே வருகிறாள் கையில் அந்த குடை. எங்கோ விளையாடிக் கொண்டு நின்ற அந்த சிறுவன் தாயைக் கண்டதும் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடி வருகிறான்.
" இதுக்குத்தானே அடம்பிடிச்சனீ...இந்தா..."
பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற பரிசு போல் ஆனந்தமும் வெட்கமும் கலந்து இரு கைகளாலும் வாங்கிக் கொள்கிறான். அவளும் அவனை ஆசையாக அள்ளி அணைத்து முத்தமிட்டு விட்டு அந்தக் குடிசைக்குள் குனிந்து நுழைகிறாள்.
###
இடியுடன் மழை பெய்ய ஆரம்பிக்கிறது.வீட்டினுள் நின்றவள் ஏதோ திடுக்குற்றவாளாய் "தம்பி எங்க போட்டான் முற்றத்தில் தானே விளையாடிக் கொண்டு நின்றவன். தாவாரத்தினால் எட்டிப்பார்த்து
"தம்பி......மகிழன்......."உரத்து கூப்பிடுகிறாள்.
###
உடல் முழுவதும் தொப்பையாக நனைந்து கொண்டு கிரவல் கரைந்து ஓடும் அந்த வீதியில் கன்று தவறிய பசுவாக அவள் "மகிழன்... தம்பி.."
வீதியில் குடையுடன் போய்க் கொண்டிருந்த முதியவரிடம் ஐயா மகனை கண்டனிங்களே? இல்லை என்பது போல் அவர் தலையாட்டுகிறார்.
மழை சோ வென பொழிகிறது. அவள் இடது பக்கமாக துயிலும் இல்லம் தோன்றுவதாக கேமராவின் திசையில் காட்சி நகரத் தொடங்குகிறது. வீதியை நோக்கிய நேர் பார்வையில் சென்றவள் நின்று திரும்பி அந்த பரந்து விரிந்த கல்லறை தோட்டத்தை பார்க்கிறாள். கல்லறை வரிசைகளின் தொலைவில் ஓர் கல்லறைக்கு அருகில் குடையுடன் ஒரு சிறுவன். கண்களை சுருக்கி உற்றுப் பார்க்கிறாள்.. அது மகிழன் தான்.
மகிழன்....மகிழன்... மூச்சிறைக்க கத்தியபடி ஓடி வருகிறாள்... அவள் அருகில் வரும் வரை குடையுடன் தன் தந்தை கல்லறையின் அருகில் அமைதியாக நின்ற மகிழன் வேறு எதுவும் பேசாமல் மூச்சு வாங்கியபடி தொப்பையாக நனைந்து நின்ற தாயை திரும்பிப் பார்த்து
"அம்மா, அப்பா பாவமில்லா மழைக்க நனையிறார்"
எம் கண்கள் நனைக்கும் அதே இசைவுடன் மெல்லிய இசையும் சேர்ந்து கேமராவின் கண்கள் மூடுகிறது...

3 comments:
தங்களின் எழுத்துக்களுக்கும், இப்ப அதை எழுத நினைத்தமைக்கும் வாழ்த்துகள்.
இதை வாசிக்கும்போது படம்பார்த்து போலவே உணர்வு, இதைப்போல நடந்தவற்றை அனுபவித்தவர்களுக்கு அதன் உயிரோட்டம் விளங்கும்.
"குடைக்காக ஏங்கும் பலர் இன்னமும்
இருக்கிறார்கள்."
மிக்க நன்றி
சிறப்பு...
Post a Comment